ஆண்டின் சிறந்த ப்ரீமியர் லீக் வீரர் விருதும் சலாஹ் வசமானது

278

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் இந்த பருவத்தின் சிறந்த வீரருக்கான விருதை லிவர்பூல் முன்கள வீரர் முஹமது சலாஹ் வென்றுள்ளார்.

எகிப்து தேசிய அணி வீரரான 25 வயதுடைய சலாஹ் கடந்த ஆண்டு ரோமா அணியில் இருந்து 34 மில்லியன் பிரித்தானிய பவுண்களுக்கு ஒப்பந்தமான பின் தனது முதல் ப்ரீமியர் லீக் பருவத்தில் 37 லீக் போட்டிகளிலும் 31 கோல்களை பெற்றுள்ளார்.  

சலாஹ் ஏற்கனவே தொழில்முறை கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் கால்பந்து செய்தியாளர் சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.  

இது தவிர, லிவர்பூல் அணியின் பருவத்தின் சிறந்த வீரர் மற்றும் ஆபிரிக்காவின் ஆண்டின் சிறந்த வீரர் விருதையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

இந்நிலையில் நிபுணர்கள் குழு, ப்ரீமியர் லீக் தலைவர்கள் மற்றும் ரசிகர்களின் பொது வாக்குகள் ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு சிக்கலான தேர்வு முறை மூலமே சலாஹ் ஆண்டின் சிறந்த ப்ரீமியர் லீக் வீரர் விருதை வென்றுள்ளார்.

2017-2018 தொடரில் தனது அபரிமிதமான திறமையை வெளிப்படுத்தி தம்மை சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தே சலாஹ் இந்த விருதை வெல்கிறார் என்று ப்ரீமியர் லீக் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2016 இங்கிலாந்தில் செல்சி அணிக்காக ஆடியபோதும் அந்த பருவங்களில் சலாஹ் சோபிக்கத் தவறி இருந்தார். இந்நிலையில் அவர் லிவர்பூல் அணிக்காக அனைத்து போட்டிகளும் உள்ளடங்கலாக 50 போட்டிகளில் 43 கோல்களைப் பெற்றுள்ளார்.

”இங்கு முதல் முறை நான் பிரகாசிக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, ப்ரீமியர் லீக்கில் பிரகாசிக்க வேண்டும் என்று எப்போதும் எனது மனதில் இருந்தது. நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது கிடைத்த்தற்காக நான் பெருமை அடைகிறேன்” என்று விருதை வென்ற பின்னர் சலாஹ் குறிப்பிட்டார்.