குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

1572
Image Courtesy - AFP

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், குசல் ஜனித் பெரேரா சதமடித்த போதும், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

புதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி

தமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட்..

நியூசிலாந்தின் மௌண்ட் மங்கனூயில் (Mount Maunganui) உள்ள பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இலங்கை அணி

நிரோஷன் திக்வெல்லகுசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ்தினேஷ் சந்திமால்தனுஷ்க குணதிலக்க, திசர பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, லசித் மாலிங்க (அணித்தலைவர்), நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன்

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரென்ட் போல்ட்லொக்கி பேர்கசன்மார்ட்டின் குப்டில்மெட்ஹென்ரி,  கொலின் மன்ரோஜேம்ஸ் நீஷம்ஹென்ரி நிக்கோலஸ்டீம் செய்பர்ட்இஸ் சோதிரோஸ் டெய்லர்

அதன்படி முதலில் துடுப்பாடிய சொந்த மைதான வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கொலின் மன்ரோவின் விக்கெட்டினை லசித் மாலிங்க வீழ்த்தி, இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும், இதனையடுத்து களம் நுழைந்த கேன் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் குப்டில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதப்படுத்தினர்.

இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, இரண்டாவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் 76 ஓட்டங்களுடன், நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ் டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்டில் தனது 14வது ஒருநாள் சதத்தை கடந்தார்.

சதத்தை கடந்த குப்டில் 138 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிரேஷ்ட வீரர் ரோஸ் டெய்லர் 37 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை விளாசி, ஓய்வறை திரும்பினார். இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இறுதி நேரத்தில் களமிறங்கிய ஜிம்மி நீஷம், திசர பெரேரா வீசிய 49வது ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார்.

அதன்படி, தமது இன்னிங்சிற்காக நியூசிலாந்து வீரர்கள் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றனர்.

>> அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க

அபாரமாக ஆடிய ஜிம்மி நீஷம் வெறும் 13 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை குவிக்க, அறிமுக வீரர் டீம் செய்பர்ட் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

நியூசிலாந்து அணி விளாசிய 371 என்ற ஓட்ட எண்ணிக்கையானது, இலங்கை அணிக்கு எதிராக அந்த அணி ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு டெனிடினில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 360/5 ஓட்டங்களை விளாசியிருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குசல் பெரேராவின் சதத்தின் உதவியுடன் 326 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர்  முதல் விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றனர்.

இதில், 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த தனுஷ்க குணதிலக்க, ஜிம்மி நீஷமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அரைச்சதம் கடந்த நிரோஷன் டிக்வெல்ல 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்கள், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்கள், அசேல குணரத்ன 11 ஓட்டங்கள் மற்றும் திசர பெரேரா 4 ஓட்டங்கள் என குறைந்த ஓட்டங்களுக்கு வெளியேறினர்.

>> இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது?

எனினும், போட்டியில் தனியாளாக போராடிய குசல் ஜனித் பெரேரா 86 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்று, ஒருநாள் அரங்கில் தனது நான்காவது சதத்தை பதிவுசெய்தார். எவ்வாறாயினும் இவரின் ஆட்டமிழப்புக்கு பின்னர் இலங்கை அணியின் வெற்றிக் கனவு பறிபோயிருந்தது. இவரை அடுத்து துடுப்பெடுத்தாடிய இறுதி சகலதுறை வீரரான சீகுகே பிரசன்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ட்ரென்ட் போல்ட், இஸ் சோதி மற்றும் லொக்கி பேர்கஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அத்துடன், இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 5ம் திகதி பேய் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<