இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்

2209

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தான் எட்டிய சாதனைகள் குறித்த மகிழ்ச்சியுடன் விடைபெறும் சங்கக்கார

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கும்…

இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் உதவியைப் பெற்றுக்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் தலைவர்களான அநுர தென்னகோன், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் லக்ஷ்மன் எதிரிசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

எனினும், இக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான குமார் சங்கக்காரவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தனவுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவினால் எதிர்வரும் 3 மாதங்களில் கிரிக்கெட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான அறிக்கையை சமர்பிக்கவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினைப் பிடித்து பல கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கி பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக விளங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணி மீதான குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் ஜிம்பாப்வே தலைவர்

இலங்கை அணி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஜிம்பாப்வே அணி…

அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி அதிகாரிகளும் பல அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தோல்வி, ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் இந்திய அணியுடனான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தமை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கான விசேட செயலமர்வொன்றை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு முடிவுசெய்தது. இதற்காக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் மில்டன் அமரசிங்க, கொழும்பு பல்கலைக்கழக பேராசியர் ரஞ்சித் பண்டார, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி லக்ஷ்மன் எதிரிசிங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழுவொன்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இடம்பெற்ற இவ்விசேட சம்மேளனம், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த சம்மேளனத்தின் பிறகு தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை கொழும்பு பல்கலைக்கழக பேராசியர் ரஞ்சித் பண்டாரவினால் நேற்று முன்தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரமோத்யவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை வீரர்கள் கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் அணித் தேர்வாளருமான பிரமோத்ய…

இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் ஹேமக அமரசூரிய மற்றும் அரவிந்தி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எனவே, குறித்த அறிக்கையை ஆராய்ந்து, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்காக நீண்ட கால திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து மனிதவள ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொடுக்கமாறு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது.

அதன்படி முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட இவ் விசேட ஆலோசனைக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க