ஒரு இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுக்களை சாய்த்த ஜீவன் மென்டிஸ்

367

இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு A கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தி வரும் மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (28) ஆறு போட்டிகள் ஆரம்பமாகின.

மூன்று நாட்களுக்குரிய போட்டிகளை கொண்டிருக்கும் இத்தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளில் பெதும் நிசங்க, பியமால் பெரேரா  ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்த தேசிய அணி வீரரான ஜீவன் மென்டிஸ் பந்துவீச்சில் அபார ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தார்.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பதுரெலிய அணி வீரர்கள் மைதான சொந்தக்காரர்களான கோல்ட்ஸ் அணியினை முதலில் துடுப்பாட பணித்தனர்.

தென்னாபிரிக்க உள்ளூர் டி-20 தொடரில் பிரகாசிக்கும் ஜீவன் மெண்டிஸ்

இதன்படி முதலில் துடுப்பாடிய கோல்ட்ஸ் அணி பியமால் பெரேரா பெற்ற சதத்தின் உதவியோடு போட்டியின் முதல் நாள் நிறைவில் 294 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றது. சதம் கடந்த பியமால் பெரேரா 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கின்றார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 294/8 (90) பியமால் பெரேரா 105*, விஷாத் ரண்டிக்க 85, புத்திக்க சஞ்சீவ 5/57


NCC எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம்

சோனகர் கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதல் துடுப்பாடிய NCC அணிக்கு பெதும் நிசங்க சதம் ஒன்றினை தாண்டி 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்த அபார சதத்தினால் NCC அணி தமது முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களை குவித்தது. இதேநேரம் சோனகர் கழக அணிக்காக சுழல் வீரரான தரிந்து கௌசால் 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸினை ஆரம்பித்த சோனகர் கிரிக்கெட் கழகம் போட்டியின் முதல் நாள் நிறைவில் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 330 (65.5) பெதும் நிசங்க 163, அஞ்சலோ பெரேரா 61, தரிந்து கெளசால் 4/72

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 30/1 (9)


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடிய இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் ரவிந்து குணசேகர (66), பிரசான் விக்கிரமசிங்க (59) ஆகியோரின் அரைச்சதங்களோடு 245 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் பெற்றது. துறைமுக அதிகார சபையின் இந்த இன்னிங்ஸில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திற்காக பந்துவீச்சில் ஜொலித்த தேசிய கிரிக்கெட் அணி வீரர் ஜீவன் மென்டிஸ் 53 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸில் ஆடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணியினர் போட்டியின் முதல் நாள் முடிவில் 28 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்படுகின்றனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245 (82) ருவிந்து குணசேகர 66, பிரசான் விக்கிரமசிங்க 59, ஜீவன் மெண்டிஸ் 9/53

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 28/0 (6)


BRC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்கவில் தொடங்கிய இந்தப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழக அணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட BRC அணி, கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் அபார பந்துவீச்சு காரணமாக தமது முதல் இன்னிங்ஸில் வெறும் 101 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. கொழும்பு அணிக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சளர்களான விஷ்வ பெர்னாந்து 4 விக்கெட்டுக்களையும், லஹிறு கமகே 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்து போட்டியின் முதல் நாள் நிறைவில் 154  ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து மிகவும் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

போட்டி சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 105 (43.4) ஹஷன் ராமநாயக்க 24, விஷ்வ பெர்னாந்து 4/52, லஹிறு கமகே 3/19

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 154/2 (43.1)


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களை குவித்தனர். நீர்கொழும்பு கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் சனித டி மெல் 43 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்ய இடதுகை வேகப்பந்துவீச்சாளரான விமுக்தி பெரேரா 3 விக்கெட்டுக்களை SSC அணிக்காக கைப்பற்றினார்.

இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் SSC அணி போட்டியின் முதல் நாள் நிறைவில் 88 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி நல்ல நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 212 (62.3) சனித டி மெல் 3/33, விமுக்தி பெரேரா 3/33

SSC (முதல் இன்னிங்ஸ்) – 88/0 (21)


இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பனாகொடவில் ஆரம்பித்த இப்போட்டியில் இன்றைய முதல் நாளில் 71 ஓவர்களே வீச முடியுமாக இருந்தது. இந்த ஓவர்கள் அனைத்தினையும் தமது முதல் இன்னிங்ஸில் எதிர்கொண்ட இராணுவப்படை விளையாட்டுக் கழகம் ஆட்டத்தின் முதல் நாளில் 196 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. இராணுவப்படை அணியின் இன்றைய துடுப்பாட்டத்தில் லக்ஷான் எதிரிசிங்க அரைச்சதம் (76) ஒன்றினைப் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 196/7 (71) லக்ஷான் எதிரிசிங்க 76, ஜனித் சில்வா 32, திக்ஷில டி சில்வா 2/55

இன்று ஆரம்பமான அனைத்து போட்டிகளினதும் இராண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க