பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் வரலாற்று சாதனை

3
Image Courtesy - PSL Twitter

பாகிஸ்தான் சுப்பர் லீக் வரலாற்றில் பதிவாகியிருந்த அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களானது மூன்று வருடங்களுக்கு பின்னர் நேற்றைய தினம் (15) கராச்சி கிங்ஸ் அணி வீரர்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் குறைந்த நேரத்திற்குள் அதிகளவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு போட்டியாக டி20 போட்டி காணப்படுகின்றது. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகளுக்கு விசேடமான முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாடுகின்ற அணிகளினுடைய கிரிக்கெட் சபைகளில் காணப்படுன்ற நிதியை வைத்து ஒரு சில நாடுகள் டி20 லீக் தொடர்களை வருடா வருடம் நடாத்தி வருகின்றது. இதில் அதிக செலவுகள் செய்யப்பட்டு பிரபலமாக நடாத்தப்படுகின்ற லீக் தொடர்களாக இந்தியன் பிரிமியர் லீக், பிக்பேஷ் லீக், கரிபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக் போன்றன காணப்படுகின்றன.

மேஜர் T20 லீக்கில் பிரகாசித்த சந்திமால், அகில மற்றும் சீகுகே

இவ்வாறு அதிக செலவுகள் செய்யப்பட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற ஒரு விளையாட்டு தான் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடராகும். 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரானது இன்று வரையில் மூன்று தொடர்கள் நிறைவு செய்யப்பட்டு நான்காவது தொடர் நேற்று முன்தினம் (14) ஆரம்பமாகியிருக்கின்றது.

நான்காவது பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் நேற்று (15) நடைபெற்ற தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் சுப்பர் லீக் வரலாற்றில் நிகழ்த்தப்பட்டிருந்த சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நடைபெற்றுமுடிந்த மூன்று பருவகாலங்களில் அதிக இணைப்பாட்டமாக 2016 பெப்ரவரி 10 ஆம் திகதி சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இஸ்லமாபாத் அணியின் ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா) மற்றும் சர்ஜீல் கான் (பாகிஸ்தான்) ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக லாஹூர் அணிக்கெதிரான போட்டியில் நிகழ்த்திய 153 ஓட்டங்களே இதுவரையில் பாகிஸ்தான் சுப்பர் லீக் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்காவும் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக காணப்பட்டது.

இவ்விணைப்பாட்டமானது நேற்று (15) டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்டன் சுல்தான்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின் போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து குறித்த இணைப்பாட்ட சாதனையை முறியடித்துள்ளனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கராச்சி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரு டி20 சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள இளம் துடுப்பாட்ட வீரர் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஐ.சி.சி இனுடைய டி20 சர்வதேச துடுப்பாட்ட வீரர்களில் வரிசையில் முதலிடத்தில் காணப்படும் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அஸாம் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

இருவரும் முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக 15.4 ஓவர்கள் நிறைவில் 157 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் லியம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். இருந்தாலும் முன்னதாக காணப்பட்ட இணைப்பாட்டத்தை இருவரும் இணைந்து 154 ஓட்டங்களை கடந்த போதே முறியடிக்கப்பட்டது.

இதனால் 2016 ஆம் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பதிவு செய்யப்பட்டிருந்த அதிகூடிய இணைப்பாட்டமானது முதலாவது விக்கெட்டுக்காகவே மீண்டும் மூன்று வருடங்களுக்கு பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<