இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குசல் பெரேரா  விளையாடுவது சந்தேகம்

1799

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தொடைப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி பல்லேகலையில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ThePapare.com இற்கு தெரியவருகிறது.

“இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவரது பின்தொடை பகுதியில் சிறு உபாதை ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் செவ்வாய்க்கிழமை (16) MRI ஸ்கேன் சோதனைக்கு முகம்கொடுக்கவுள்ளார். மேலும் சோதனைக்கு பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று  இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க ThePapare.com இற்கு திங்கட்கிழமை (15) குறிப்பிட்டார்.

பல்லேகலை சர்வதேச அரங்கில் திங்கள் மாலை இடம்பெற்ற பயிற்சியில் அவர் அணியுடன் இருக்கவில்லை. எனினும் அவரது உபாதையின் அளவை கண்டறிய இலங்கை அணியின் உடற்தகுதி நிபுணர் அஜந்த வத்தேகமவின் சிறு உடற்தகுதி சோதனை ஒன்றுக்கு முகம்கொடுத்தார்.

லசித் மாலிங்க ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் – இயன் மோர்கன்

சனிக்கிழமை (13) தம்புள்ளையில் நடைபெற்ற…

கடந்த சனிக்கிழமை தம்புள்ளையில் நடைபெற்ற  2 ஆவது ஒருநாள் போட்டியில்  நான்காவது வரிசையில் துடுப்பெடுத்தாடிய பெரேரா 37 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றார்.

பெரேரா போட்டியில் பங்கேற்கும் உடற் தகுதியை பெறாதபட்சத்தில் சதீர சமரவிக்ரம இலங்கை பதினொரு வீரர்களுக்குள் இடம்பெறுவார். நேர்த்தியான வலதுகை துடுப்பாட்ட வீரரான 23 வயதுடைய சமரவிக்ரம பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதனிடையே உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின்  இடது கைது சுழல் பந்துவீச்சாளர் லியாம் டோசனும் அடுத்து வரும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் உள்ளது. அவரது விலாப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான் மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டிகள் பல்லேகலையில் நடைபெறவுள்ளதோடு ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க