தென்னாபிரிக்க உள்ளூர் T20 தொடரில் விளையாடவுள்ள ஜீவன் மெண்டிஸ்

9

ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தவிதத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் ஒழுங்கு செய்துள்ள ம்சான்ஸி சுபர் லீக் (MSL) T20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

கேப் டவுன் ப்லிட்ஸ், டர்பன் ஹீட், ஜோசி ஸ்டார்ஸ், நெல்சன் மன்டேலா பாய் ஜயன்ட்ஸ், பார்ல் ரோக்ஸ் மற்றும் ஸ்வானே ஸ்பார்டன்ஸ் என ஆறு அணிகள் பங்குபெறும் இந்த T20 தொடரின் வீரர்கள் ஏலம் இன்று (17) இடம் பெற்றிருந்தது.

இந்த வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸை ஸ்வானே ஸ்பார்டன்ஸ் அணி தமக்கு விளையாடுவதற்காக  கொள்முதல் செய்திருந்தது.

இளையோர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம்

இதன் மூலம் ஜீவன் மெண்டிஸ் 14 சுற்றுக்களாக நடைபெற்றிருந்த ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஒரே இலங்கை வீரராகவும் மாறியிருந்தார்.  இதுவரை உள்ளூர், சர்வதேசப் போட்டிகள் என மொத்தமாக 138 T20 போட்டிகளில் ஆடியுள்ள 35 வயதான ஜீவன் மெண்டிஸ் அவற்றில் 84 விக்கெட்டுக்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளதோடு 3 அரைச்சதங்கள் அடங்கலாக 1,970 ஓட்டங்களை பெற்ற அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார்.

கிட்டத்தட்ட ஐந்து வருட கால இடைவெளியின் பின்னர் இந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் T20 குழாமிலும் இணைந்த ஜீவன் மெண்டிஸ், தனது தாய் நாட்டிற்காகவும் பந்துவீச்சில் ஜொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் T20 போட்டிகளுக்கென சிறப்பு வீரர்களாக கருதப்படும் இயன் மோர்கன், ஜேசன் ரோய், டாவிட் மாலன், கிறிஸ் கெயில், டிவெய்ன் ப்ராவோ மற்றும் ராஷித் கான் ஆகியோரும் இன்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் அணிகளால் கொள்முதல் செய்யப்பட்டிருந்தனர்.

இதில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் வீரரான ராஷித் கானை டர்பன் ஹீட்ஸ் அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலினை ஜோசி ஸ்டார்ஸ் அணியும், பார்ல் ரொக்ஸ் அணி டிவெய்ன் ப்ராவோவினையும், கேப் டவுன் ப்ளிட்ஸ் அணி டாவிட் மலானினையும், ஜீவன் மெண்டிஸின் ஸ்வானே ஸ்பார்டன்ஸ் அணி இயன் மோர்கனையும், நெல்சன் மன்டேலா பேன் ஜயன்ட்ஸ் அணி ஜேசன் ரோயையும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<