அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஜப்பான் பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி

163
Image Coutesy - Shuji Kajiyama/AP

ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்ற நான்காவது அணியாக ஜப்பான் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளது.  

ஜப்பானின் சைட்டாமா அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய மண்டலத்திற்கான தகுதிகாண் போட்டியில் பலம்கொண்ட அவுஸ்திரேலியாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே ஜப்பான் ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாட தனது இடத்தை பதிவு செய்து கொண்டது.

பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் இவ்வாரம் முன்னேறியுள்ள கழகங்கள்

கடந்த 1998ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மண்டல உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றன. இதில் மூன்றாவது சுற்றின் B குழுவில் இரு அணிகளுக்கே நேரடித் தகுதி பெற முடியும் என்ற நிலையில் அந்த இடத்திற்கு ஜப்பானுடன் சவூதி அரேபியா மற்றும் அவுஸ்திரேலிய அணிளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. எனினும் சவூதி கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தகுதி காண் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்றதால் ஜப்பான் மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் என்ற பரபரப்பு நிலவியது.  

இந்நிலையில் தீர்க்கமான ஆட்டமான ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி ஆரம்பித்தது தொடக்கம் பெரும்பாலான நேரங்கள் ஜப்பான் வீரர்களின் கால்களிலேயே பந்து தங்கியிருந்து.  ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் யொசுகே இடகுச்சி அடித்த பந்து கோல் கம்பத்தையும் கடந்து ரசிகர் மத்தியில் விழுந்த போது அரங்கில் இருந்த 59,492 பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

போட்டியின் முதல் பாதி முடிவதற்கு மேலும் நான்கு நிமிடங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் டகுமா ஒசானோ அவுஸ்திரேலிய பின்வரிசை வீரர்களை ஏமாற்றி கோல் கம்கத்தின் அருகாமை வரை முன்னேறி, இறுதியில் பந்தை இலகுவாக கோலுக்குள் புகுதித்தினார். இது அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. ஒசானோ கோல் கம்பத்தை நெருங்கும்போது ஒரு அவுஸ்திரேலிய வீரர் கூட அருகில் இருக்கவில்லை.  

இதனால் போட்டியின் முதல் பாதி முடியும்போது ஜப்பான் அணிக்கு ஒரு கோலினால் முன்னிலை பெற முடிந்தது.    

முதல் பாதி: ஜப்பான் 1 – 0 அவுஸ்திரேலியா  

இரண்டாவது பாதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஜப்பானிய வீரர்கள் ஆஸி. கோல் பரப்பை அக்கிரமிக்கும்போது ஆஸி. வீரர்களால் தற்காப்பு ஆட்டத்தையே வெளிக்காட்ட முடிந்தது.

இந்நிலையில் போட்டியின் 82 ஆவது நிமிடத்தில் 21 வயதான யொசுகே இடிகுச் ஆஸி. பின்கள வீரர்களை முறியடித்து வலது கோர் திசைக்கு எடுத்து வந்து பந்தை கோலாக மாற்றினார். இதனால் ஜப்பான் அணி நெருங்க முடியாத வகையில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் முன்னிலை பெற்றது. கடைசி வரை ஆஸி. வீரர்களால் பதில் கோல் எதனையும் போட முடியவில்லை.

முழு நேரம்: ஜப்பான் 2 – 0 அவுஸ்திரேலியா

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இதுவரை நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடாத்தும் ரஷ்யாவோடு பிரேஸில் மற்றும் ஈரான் அணிகள் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

ஆசிய மண்டலத்தில் மொத்தம் நான்கு அணிகளே நேரடி தகுதித் பெற முடியும் என்ற நிலையில் ஈரான் மற்றும் ஜப்பான் அணிகள் உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்துள்ளன.  

தீர்க்கமான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை ஆரம்பம்

ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளின் மூன்றாவது சுற்றில் ஈரான் A குழுவில் 21 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஜப்பான் B குழுவில் 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும் காணப்படுகின்றன. இதன்படி ஆசிய மண்டலத்தில் மேலும் இரு அணிகளுக்கு உலகக் கிண்ணத்தில் நேரடித் தகுதிக்கு வாய்ப்பு உள்ளன. இதற்கு சவூதி அரேபியா அல்லது அவுஸ்திரேலிய மற்றும் தென் கொரியா, சிரியா அல்லது உஸ்பகிஸ்தான் அணிகள் தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.   

இதில் B குழுவில் சவூதி மற்றும் ஆஸி. அணிகள் தலா 16 புள்ளிகளுடன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. எனினும் சவூதி கோல்கள் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை விட முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியா தனது அடுத்த போட்டியில் செப்டம்பர் 5 ஆம் திகதி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஜப்பானை வீழ்த்தும் பட்சத்தில் சவூதி தனது உலகக் கிண்ண இடத்தை உறுதி செய்து விடும்.   

ஆசிய மண்டலத்தின் குழு A இல் தென் கொரியா 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதோடு உஸ்பகிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் காணப்படுகிறது. இந்த இரு அணிகளும் செப்டம்பர் 5 ஆம் திகதி தனது இறுதி தகுதிகாண் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளன. எனவே, இந்த போட்டியில் தென் கொரியா வென்றால் அந்த அணி எந்த நெருக்கடியும் இன்றி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றவிடும்.

ஆனால் உஸ்பகிஸ்தான் அணி தென் கொரியாவை தோற்கடித்தால் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சிரியா, தனது கடைசி போட்டியில் ஈரானை வீழ்த்தும் பட்சத்தில் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் சிரியாவால் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற முடியும்.   

சிரியா, கடந்த வியாழக்கிழமை (31) கட்டாருடன் நடந்த தகுதிகாண் போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றதை அடுத்தே தனது உலகக் கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.    

அடுத்த ஆண்டு ஜுன் 14ஆம் திகதி தொடக்கம் ஜுலை 15ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மொத்தம் 32 அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.