சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகள் மோதும் 112 ஆவது வடக்கின் பெரும் சமர் இன்று (08) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் சிவலிங்கம் தசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 22 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில், சுஜன் முதலாவது விக்கெட்டை சாய்த்தார். பின்னர் தசோபன் எதிர்பார்ப்பிற்குரிய வீரரான அபினாசை விரைவாக ஆடுகளம் விட்டு அகற்றினார். ஷெரோபன் நிதானமாக ஆடி அரைச் சதம் (65) கடந்திருந்தார். மறுமுனையில் எல்ஷான் டெனுஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

வடக்கின் பெரும் சமரில் இம்முறை சாதிக்கப்போவது யார்?

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆடுகளம் விரைந்த  சென் ஜோன்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் யதுஷன் வந்த வேகத்திலேயே சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான வியாஸ்கந்த் மூலம் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 18 ஓட்டங்களுடன் சுபீட்ஷன் துஷாந்தனின் பந்து  வீச்சில் ஆட்டமிழந்தார். நெடுநேரம் நிலைத்து, நிதானமாக ஆடி 160 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் எல்ஷான் டெனுசனின் விக்கெட்டையும் வியாஸ்கந்த் சாய்த்தார்.

7 ஆம் இலக்கத்தில் களம் நுழைந்த டினோசன் விரைவான 28 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். கபில்ராஜ், அபிலாக்ஷன் ஆகியோரின் விக்கெட்டுக்கள் விரைவாக சரிக்கப்பட, 101 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் என்ற பலமான நிலையில் மதிய போசண இடைவேளைக்கு சென்றிருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி  195 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதியில் ஜோயல் பிரவீனின்  21 ஓட்டங்களின் துணையுடன், சென் ஜோன்ஸ் கல்லூரி 77.1 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.  

யாழ் மத்திய கல்லூரியின் சார்பில் பந்துவீச்சில் 8 விக்கெட்டுக்களை சுழல் பந்துவீச்சாளர்கள் தம்வசப்படுத்தினர். அதிலும் வியாஸ்காந்த் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியின் போக்கை மாற்றியிருந்தார். வியாஸ்கந்த 4 விக்கெட்டுக்களையும் தசோபன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடந்து தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த யாழ் மத்திய கல்லூரி அணி ஆட்ட நேர நிறைவில் 16 ஓவர்களை எதிர்கொண்டு 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்படுகின்றது.

முதல் நாள் ஆட்ட புகைப்படங்களைப் பார்வையிட

ஜெயதர்ஷன் 16 ஓட்டங்களுடனும், நிஷான் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். வீழ்த்தப்பட்ட ஒரு விக்கெட்டை கபில்ராஜ் தம்வசப்படுத்தியிருந்தார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.

  • ஸ்கோர் விபரம்