60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி

753
Italy fails to qualify for FIFA World Cup

சுவீடன் அணியுடனான பிளோ ஓப் (play-off) சுற்றில் தோல்வியை சந்தித்த இத்தாலி அணி 1958ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

மிலான் நகரில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற சுவீடனுடனான இரண்டாவது கட்ட பிளே ஓப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிர்ப்பந்தத்துடன் களமிறங்கிய இத்தாலி அந்தப் போட்டியில் எந்த ஒரு கோலையும் புகுத்தாமல் ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் கட்ட பிளே ஓப் போட்டியில் சுவீடன் 1-0 என்ற கோல்களால் வெற்றியீட்டிய நிலையிலேயே குறித்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் இறுதிக்கட்ட பலப்பரீட்சை ஆரம்பம்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்..

இதன்மூலம் பிளே ஓப் சுற்றை 1-0 என வென்ற சுவீடன் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு முதல்முறை தகுதி பெற்றது.

1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதை மறுத்த இத்தாலி, அதற்குப் பின் தற்போது மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளது. இத்தாலி அணி இதுவரை நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்றிருப்பதோடு இரண்டு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள ஒரு அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி 1984ஆம் மற்றும் 1992ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்களுக்கு தகுதி பெறாததே அந்த அணி பிரதான கால்பந்து தொடர் ஒன்றை இழந்த கடைசி சந்தர்ப்பங்களாகும்.  

இந்நிலையில், தனது சொந்த மண்ணில் 74,000 ரசிகர்கள் முன் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று (13) களமிறங்கிய இத்தாலி அணி போட்டியின் 73 வீதமான நேரத்தில் பந்தை தன் வசம் வைத்துக்கொண்டு 23 கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் அவர்களால் கோல் ஒன்றை புகுத்த முடியாமல் போனது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் இத்தாலி வீரர் மார்கோ பரொலோவுடன் சுவீடன் வீரர் பின்புறமாக மோதியபோது நடுவரிடம் இத்தாலி தரப்பு பெனால்டி கேட்டபோதும் போட்டியை தொடர நடுவர் சமிக்ஞை செய்தார்.

<

ஜொப் மைக்கலின் ஹட்ரிக் கோலினால் போட்டியை வென்ற ரினௌன்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் டயலொக் சம்பியன்ஸ்…

தொடர்ந்து முதல் கட்ட பிளோ ஓப் போட்டியில் கோல் புகுத்திய ஜொஹன்சனை போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் சுவீடன் இழந்தது. அவரது இடது முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து ஜொஹன்சன் வெளியேறினார்.  முதல் பாதியில் இத்தாலி அணிக்கு சாதகமாக போட்டி தொடர்ந்தபோதும் அந்த அணியால் கோல் புகுத்த முடியாமல் போனது.

முதல் பாதி: இத்தாலி 0 – 0 சுவீடன்

இத்தாலி மத்தியகள வீரர் பிளோரன்சி 53ஆவது நிமிடத்தில் உதைத்த பந்து எதிரணி கோல் கம்பந்தை நோக்கி பறந்தபோது அது கோலாக மாறும் என்று அவர் சற்று உற்சாகம் அடைந்தார். ஆனால் அந்த பந்து கம்பத்திற்கு வெளியால் பறந்தது.

போட்டி முடிவை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும்போது இத்தாலி பக்கத்தில் பரபரப்பு அதிகரித்தது. அரங்கில் நிரம்பி வழிந்த இத்தாலி ரசிகர்கள் அந்நாட்டு தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தார்கள். எனினும் சுவீடன் தொடர்ந்து தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு இத்தாலிக்கு கடும் சவால் கொடுத்து வந்த நிலையில் இறுதி விசில் ஊதப்பட்டது.

சொந்த மைதானத்தில் இடம்பெற்ற மிகவும் தீர்மானம் மிக்க இந்த ஆட்டத்தை வெற்றி கொள்ளத் தவறியமையினால், 60 ஆண்டுகளின் பின் இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.   

முழு நேரம்: இத்தாலி 0 – 0 சுவீடன்

இந்த தோல்வியுடன் இத்தாலி அணியின் கோல் காப்பாளர் கியான்லிகி பபோன் கால்பந்து அரங்கில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். இதன்மூலம் அவர் ஆறாவது சாதனை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தார். “என்னை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்” என்று போட்டிக்கு பின் அவர் அழுதபடி ராய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.  

ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?

விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை..

கடந்த 20 ஆண்டுகளாக இத்தாலி அணிக்கு விளையாடும் 39 வயதான பபோன், 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார்.    

பபொனின் ஜுவென்டஸ் கழக அணியைச் சேர்ந்த சக வீரர் அன்ட்ரி பார்சக்லி மற்றும் ரோமா மத்தியகள வீரர் டானியல் டி ரொஸ்ஸி ஆகியோருடன் ஜோர்ஜியோ சிலினி ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எதிர்பார்த்துள்ளனர். இவர்கள் மொத்தம் 461 போட்டிகளில் இத்தாலி அணிக்காக ஆடியுள்ளனர்.

2018 ஜுன், ஜூலை மாதங்களில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் 32 நாடுகளில் இதுவரை 29 நாடுகள் தேர்வாகியுள்ளன. எஞ்சியுள்ள மூன்று அணிகளை தேர்வு செய்வதற்கான தனுதிகாண் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும்.