தாய்லாந்து திறந்த மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்

192

பேங்கொக் நகரில் கடந்த வியாழக்கிழமை (03) தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பமாகியிருந்தது. இத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்த வீர, வீராங்கனைகள் முதல் நாளிலேயே 04 பதக்கங்களை தமக்குச் சொந்தமாக்கி தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் பதக்கங்கள் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர, வீராங்கனைகளாக கிரேஷான் தனஞ்சய, உஷான் திவங்க, சுமேத ரணசிங்க மற்றும்  அஞ்சானி புள்வன்ஷா ஆகியோர் அமைகின்றனர். இவர்களில் ஆடவர்களான கிரேஷான் தனஞ்சய நீளம் பாய்தலிலும், உஷான் திவங்க உயரம் பாய்தலிலும், சுமேத ரணசிங்க ஈட்டி ஏறிதலிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்ததோடு, மகளிருக்கான நீளம் பாய்தலில்  அஞ்சானி புள்வன்ஷா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தடகள வீரர்கள், சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகளில் சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே  இலங்கை தமது இளம் வீரர்கள் அடங்கிய குழுவொன்றினை தாய்லாந்தின் திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக அனுப்பி வைத்திருந்தது.

>> தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 நாடுகளைச் சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்பு

இத்தொடரின் போது தங்கப் பதக்கம் வென்ற ஆடவர்களில் ஒருவரான கிரேஷான் தனஞ்சய தனது விளையாட்டு நிகழ்ச்சியான நீளம் பாய்தலில் 7.90 மீட்டர் நீளத்தை எட்டியிருந்ததோடு, தனது சொந்த சாதனையையும் முறியடித்திருந்தார். சர்வதேச ரீதியில் இடம்பெற்ற கனிஷ்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை  பிரதிநிதித்துவம் செய்தவரான கிரேஷான் நீளம் பாய்தலில் தற்போது 8 மீட்டர் நீளத்தை அண்மித்திருப்பதால் நடைபெறப்போகும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் எதிர்பார்க்கப்படும் வீரராகவும் மாறியிருக்கின்றார்.

இலங்கையின் மூன்றாவது சிறந்த உயரம் பாய்தல் வீரராக கருதப்படும் உஷான் திவங்க கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரின் போது 2.21 மீட்டர் உயரம் தாவி, உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் தன்னுடைய சொந்த சாதனையை நிலைநாட்டியிருந்தார். எனினும், தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 2.16 மீட்டர் உயரம் தாவியதே அவருக்கு தங்கப் பதக்கம் வெல்ல போதுமாக இருந்தது. இத்தொடரில் தனது சொந்த சாதனையை முறியடிக்க உஷான் முயன்ற போதிலும் அது வெற்றிகரமாக அமைந்திருக்கவில்லை.

ஒலிம்பிக் வீரரான சுமேத ரணசிங்க, ஈட்டி ஏறிதலில்  தேசிய சாதனையாக 83.04 மீட்டர் நீளம் எட்டியவர் என்பதோடு, ஆடவருக்கான ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் 80 மீட்டர் தூரத்தை தாண்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றார். எனினும், அண்மைய நாட்களில் இலங்கையில் இடம்பெற்றிருந்த ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் சிறப்பான பதிவை காட்டிவராத அவருக்கு, தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 69 மீட்டர் நீளம் எட்டியதே தங்கப் பதக்கம் வெல்வதற்கு போதுமாக இருந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவின் போது ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்க 77 மீட்டர் நீளம் எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சர்வதேசத் விளையாட்டுத் தொடர் ஒன்றில் முதல் தடவையாக பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட வீராங்கனையான அஞ்சானி புள்வன்ஷா, தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான நீளம் பாய்தலின் இறுதிப் போட்டியில், 5.89 மீட்டர் நீளத்தை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கின்றார். எனினும், நடைபெற்று முடிந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் புள்வன்ஷா 6.09 நீளத்தை பாய்ந்து தன்னுடைய சொந்த சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழாம் திகதி வரை நடைபெறும் தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஏனைய இலங்கை வீரர்களான குபுன் குசந்த (800 மீட்டர்), நதீஷா ராமநாயக்க (400 மீட்டர்) மற்றும் லக்ஷிகா சுஹந்தி (ஹெப்எத்லோன்) ஆகியோரும் பங்குபற்றி திறமைகளை வெளிக்காட்டவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.