இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

106

பிஃபா உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் அபாரமான முறையில் மீள் எழுச்சி பெற்ற பெல்ஜியம் அணி கடைசி நேரத்தில் வெற்றி கோலை பெற்று ஜப்பானை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ரெஸ்டொவ் அரங்கில் ரஷ்ய நேரப்படி திங்கட்கிழமை (02) நடந்த போட்டியில் ஜப்பான் அணி 2-0 என முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை நெருங்கி இருந்தபோது பெல்ஜியம் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்று போட்டியை சமநிலை செய்ததோடு போட்டியின் முழு நேரம் முடியும் கடைசி இரண்டு நிமிடங்களில் பதில் தாக்குதல் கொடுத்து அபார கோல் ஒன்றை பெற்று வெற்றியீட்டியது.  

பெனால்டியில் வென்று காலிறுதிக்கு முன்னேறிய குரோஷியா

குரோஷிய கோல்காப்பாளர் டனிஜல் சுபசிக் மூன்று…

உலகக் கிண்ண நொக் அவுட் போட்டிகளில் 1970 ஆம் ஆண்டுக்கு பின்னரே அணி ஒன்று 2-0 என பின்னிலை பெற்ற நிலையில் அதில் இருந்து மீண்டு போட்டி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. 48 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக 0-2 என பின்தங்கிய நிலையில் எழுச்சி பெற்று 3-2 என போட்டியை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி பெல்ஜியம் அணி வரும் வெள்ளிக்கிழமை (06) கசான் அரங்கில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பிரேசிலை எதிர்கொள்ளவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு கொண்ட பெல்ஜியம் தனது பொற்கால அணியுடனேயே ஜப்பானை 16 அணிகள் சுற்றில் எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியபோதும் ஜப்பானின் பின்கள வீரர்கள் தொந்தரவு கொடுக்கும் வகையில் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.  

பெல்ஜியம் அணி வீரர்களின் முயற்சிகளை ஜப்பானியர் சரியான இடத்தில் இருந்து தடுத்தனர்.

குறிப்பாக உலகக் கிண்ண வரலாற்றில் நியாயமான ஆட்ட விதிகளின் அடிப்படையில் செனகல் அணியை பின்தள்ளி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் பிஃபா தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்திற்கு எதிராக சரிசமமாக பலப்பரீட்சை நடத்தியது.  

இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்றது.

முதல் பாதி: பெல்ஜியம் 0 – 0 ஜப்பான்

எனினும், இரண்டாவது பாதி ஆட்டம் பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. 48ஆவது நிமிடத்தில் கக்கு ஷிபசக்கி மைதானத்தின் பாதி தூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தை தடுப்பதற்கு ஜான் வெர்டொன்கன் தவறியதை அடுத்து அந்த பந்து நேராக ஜென்கி ஹரகுச்சியிடம் செல்ல அவர் பந்தை நேர்த்தியாக வலைக்குள் உதைந்து கோலாக மாற்றினார்.

ஸ்பெயினின் அதிர்ச்சித் தோல்வியோடு விடைபெறும் இனியஸ்டா

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரஷ்யாவிடம்…

இதன்மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற ஜப்பான் அணி அடுத்த நான்கு நிமிடங்களில் மற்றொரு கோலை பெற்றது. பெனால்டி விளிம்பில் வைத்து பந்தை பெற்ற ககாவா அதனை டகாசி இனுய் இடம் பரிமாற்றினார். அவர் மின்னல் வேகத்தில் உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் ஜப்பான் அணி 2-0 என முன்னிலை பெற்று உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறை காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கியது.

எனினும், போட்டியின் இறுதி நேரத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல்ஜியம் அணி கோல் வாய்ப்புகளை அதிகப்படியாக பெற்றது. பிரீமியர் லீக் நட்சத்திரங்களான ஹசார்ட், கெவின் டி ப்ருய்ன், ரொமேலு லுகாகு மற்றும் கோர்டொயிஸ் போன்ற வீரர்களை கொண்ட பெல்ஜியம் கடைசியில் தனது பலத்தை நிரூபிக்க ஆரம்பித்தது.

செல்சி வீரர் ஹசார்ட் ஆரம்ப 60 நிமிடங்களில் உதைத்த பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது.  

கோலுக்குள் பந்தை செலுத்துவதற்கு கடிமான இடமான மேல் வலது மூலையில் இருந்த பெல்ஜியத்தின் ஜான் வெர்டொங்கன் 69ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி பெற்ற அந்த கோல் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

20 யார்ட் தூரத்தில் இருந்து பெறப்பட்ட அந்த கோலானது தலையால் முட்டி நீண்ட தூரத்தில் இருந்து பெறப்பட்ட கோல்களில் ஒன்றாகவும் பதிவானது.

பின்னர் அடுத்த நான்கு நிமிடங்களில் பெல்ஜியம் மற்றொரு கோலை புகுத்தி போட்டியை 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்தது. எடன் ஹசார்ட் உயர உதைத்த பந்தை மருவான் பெல்லைனி தலையால் முட்டி கோலாக மாற்றினார்.  

ஜப்பான் அணி தனது இரண்டு கோல்களையும் நான்கு நிமிடம் 16 வினாடிகளுக்குள் போட்டபோது அதற்கு சிறப்பான முறையில் பதிலடி கொடுத்த பெல்ஜியம் தனது முதல் இரண்டு கோல்களையும் நான்கு நிமிடம் 30 வினாடிகளில் புகுத்தி கோல் எண்ணிக்கையை சமநிலைக்கு கொண்டுவந்தது.

இதனை அடுத்து வெற்றி கோலை பெறுவதற்கு இரு அணிகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டன. இதன்போது 85 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த அருமையான வாய்ப்புகளை ஜப்பான் கோல் காப்பாளர் அபாரமாக தடுத்து நிறுத்தினார்.

இந்நிலையில் போட்டி மேலதிக நேரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. போட்டியின் முழு நேரம் முடிவடைய இரண்டு நிமிடங்களே இருக்கும்போது ஜப்பான் அணிக்கு கிடைத்த கோணர் கிக் அந்த அணிக்கு பெரும் பாதகமாக மாறியது.

ஜப்பான் உதைத்த கோணர் கிக்கின்போது, பந்து தவறி பெல்ஜியம் வீரர்களின் கால்களுக்கு செல்ல பதில் கோல் திருப்புவதற்கு அதனை டி ப்ருய்ன் வேகமாக கடத்திச் சென்றார். அவர் பந்தை மியுனிரிடம் பரிமாற்ற அது லுகாகுவையும் தாண்டி நாசர் சாட்லியிடம் சென்றபோது அவர் இலகுவாக கோலாக மாற்றினார்.  

இதன்மூலம் பெல்ஜியம் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது

முழு நேரம்: பெல்ஜியம் 3 – 2 ஜப்பான்

கோல் பெற்றவர்கள்

ஜப்பான் ஜென்கி ஹரகுச்சி 48′, டகாசி இனுய் 52′

பெல்ஜியம் ஜான் வெர்டொங்கன் 69′, மருவான் பெல்லைனி 74′, நாசர் சாட்லி 90’+4


பிரேசிலை காலிறுதிக்கு அழைத்துச் சென்ற நெய்மார்

Image Courtesy – Getty Images

மெக்சிகோவுக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் ஒரு கோல் பெற்ற நெய்மார் மற்றொரு கோலுக்கு முக்கிய பங்காற்றி பிரேசில் அணியை உலகக் கிண்ண காலிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் பிரேசில் அணி தொடர்ச்சியாக ஏழாவது முறையாகவும் உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியதோடு மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோ உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தை சந்தித்தது. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் மெக்சிகோ அணி ஒவ்வொரு உலகக் கிண்ணத்திலும் சரியாக 16 அணிகள் சுற்றில் வைத்து வெளியேறியுள்ளது.

பெனால்டியில் வென்று காலிறுதிக்கு முன்னேறிய குரோஷியா

குரோஷிய கோல்காப்பாளர் டனிஜல் சுபசிக் மூன்று…

எனினும் சமராவில் திங்கட்கிழமை (02) நடந்த நொக் அவுட் போட்டியின் ஆரம்பத்தில் மெக்சிகோ அணி பலம் கொண்ட பிரேசிலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே மெக்சிகோவின் ஹிர்விங் லொசானோ பெனால்டி எல்லையில் வலது பக்கம் இருந்து வலையை நோக்கி உதைத்த பந்து தடுக்கப்பட்டது.

ஆனால் ஐந்தாவது நிமிடத்தில் நெய்மார் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்தபந்து நூலிழையில் தடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் முதல் 25 நிமிடங்களில் மெக்சிகோ அணி பிரேசிலுக்கு சரி நிகராக ஆடியதை காண முடிந்தது.

முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் கோல் பெறுவதில் தீவிரம் காட்டிய பிரேசில் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியது. பிரேசில் அணி பந்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு எதிரணி கோல் எல்லையை நோக்கி நேர்த்தியாக கடத்திச் சென்றபோது மெக்சிகோ பின்கள வீரர்கள் கோல் செல்வதை தடுக்க கடுமையாக போராட வேண்டி ஏற்பட்டது.

குறிப்பாக கோல் பெற கடுமையாக போராடிக்கொண்டிருந்த நெய்மார் இந்த போட்டியிலும் மைதானத்தில் கீழே விழுவதை காணமுடிந்தது. அவர் 2018 உலகக் கிண்ண போட்டியில் வேறு எந்த வீரரை விடவும் மைதானத்தில் 23 தடவைகள் கீழே விழுந்தார்.

எவ்வாறாயினும் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்றது.

முதல் பாதி: பிரேசில் 0 – 0 மெக்சிகோ 

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே பிரேசில் அணி அடுத்தடுத்து மெக்சிகோ கோல் எல்லையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 47 ஆவது நிமிடத்தில் நெய்மாரின் உதவியோடு கப்ரியல் ஜேசுஸ் வலைக்கு உதைத்தது தடுக்கப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து கோனர் கிக் மற்றும் குடின்ஹோ வலையை நோக்கி அடித்தது என்று பிரேசிலுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

இதன் போது நெய்மார் பிரேசில் அணிக்கு பொன்னான வாய்ப்பொன்றை ஏற்படுத்தி அபார கோல் ஒன்றைப் பெற்றார். போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் வைத்து பந்தை எதிரணி கோல் கம்பத்தை நோக்கி கடத்திச் சென்ற நெய்மார் சமயோசிதமாக அருகில் இருந்த வில்லியனுக்கு பின் பக்கமாக தட்டிவிட்டார். செல்சி மத்தியகள வீரரான வில்லியன் இரண்டு தடவைகள் பந்தை முன்னோக்கி உதைத்து விட்டு அதனை கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது நெய்மார் அருகில் இருந்து வலைக்குள் தட்டிவிட்டார்.

நெய்மார் உலகக் கிண்ணத்தில் பெறும் ஆறாவது கோல் இதுவாகும். இதன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக உலகக் கிண்ண கோல் பெற்றவர்கள் வரிசையில் முன்னாள் சம்பியன்களான ரொபர்டோ ரிவலினோ மற்றும் பெபெட்டோவுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார்.

ஸ்பெயினின் அதிர்ச்சித் தோல்வியோடு விடைபெறும் இனியஸ்டா

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரஷ்யாவிடம் அதிர்ச்சித் தோல்வி…

அத்துடன் நெய்மாரின் இந்த கோல் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிக கோல் பெற்ற நாடுகள் வரிசையில் பிரேசில் ஜெர்மனியை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. பிரேசில் அணி உலகக் கிண்ண வரலாற்றில் பெறும் 227 ஆவது கோல் இதுவாகும்.

நெய்மாரின் இந்த கோலை அடுத்து பிரேசில் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. மெக்சிகோ பெரும்பாலான நேரத்தை தற்காப்பு ஆட்டத்திலேயே செலவிட வேண்டி ஏற்பட்டது.

எனினும் 59 ஆவது நிமிடத்தில் தவறிழைத்த கசமிரோ இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றது பிரேசில் அணிக்கு பின்னடைவை தரும் செய்தியாகும். இதன் மூலம் அவரால் உலகக் கிண்ண காலிறுதி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கசமிரோ பிரேசில் அணியின் வேறு எந்த வீரரை விடவும் அதிகமுறை (50) பந்தை பரிமாற்றியதோடு எதிரணி எல்லைக்குள் அதிகமுறை (26) பந்தை பரிமாற்றினார்.

போட்டி முடியும் தருவாயை நெருங்கும்போது மாற்று வீரராக வந்த ரொபர்டோ பிர்மினோ பிரேசிலுக்கு மற்றொரு கோலை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். 88 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட இந்த கோல் முதல் கோலின் பாணியிலேயே இருந்தது. எதிரணி பெனால்டி எல்லைக்குள் பந்தை வேகமாக கடத்தி வந்த நெய்மார் அதனை பிர்மினோவுக்கு வழங்கி கோல் பெற உதவினார்.

பிர்மினோ மைதானத்திற்கு வந்து இரண்டு நிமிடம் மற்றும் நான்கு வினாடிகளிலேயே இந்த கோலை புகுத்தினார். இம்முறை உலகக் கிண்ணத்தில் மாற்று வீரர் ஒருவரால் பெறப்பட்ட இரண்டாவது மிக வேகமான கோலாகவும் இது இருந்தது.

இதன்படி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிரேசில் அணி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் ஆடவுள்ளது.

1986 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் மெக்சிகோ இந்த சுற்றுடன் ஏழு தடவைகள் வெளியேறியுள்ளது. இது வேறு எந்த அணியை விடவும் இரட்டிப்பு மடங்காகும்.

முழு நேரம்: பிரேசில் 2 – 0 மெக்சிகோ

கோல் பெற்றவர்கள்

பிரேசில் – நெய்மார் 51, ரொபர்டோ பிர்மினோ 88′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<