FA கிண்ண இறுதிப்போட்டி – ஒரு கண்ணோட்டம்

479
FA Cup glory

கடந்த ஜனவரி மாதம் இலங்கை முழுவதிலும் உள்ள மொத்தமாக 500 அணிகளுடன் ஆரம்பமான கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணப் போட்டிகள் தற்போது கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கையின் பிரீமியர் கால்பந்து நொக்அவுட் போட்டித் தொடரான இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் ரினொவ்ன் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகததாச மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதம்

ரினொவ்ன் விளையாட்டுக் கழகம்

-களுத்தறை பார்க் கழகத்தோடு “walkover” என்ற முறையில் வெற்றி
-நியு யங்ஸ் கழகத்தோடு 3- 1 என்ற அடிப்படையில் வெற்றி
-காலிறுதிப் போட்டியில் ஜாவா லேன் அணியோடு 5-1 என்ற அடிப்படையில் வெற்றி
-அரையிறுதிப் போட்டியில் சவுண்டர்ஸ் அணியோடு 4-2 என்ற -அடிப்படையில் வெற்றி (பெனால்டி முறையில்)

இராணுவ விளையாட்டுக் கழகம்

-நந்தமித்ர கழகத்தோடு 1-0 என்ற அடிப்படையில் வெற்றி
-ப்ரில்லியண்ட் கழகத்தோடு 12-1 என்ற அடிப்படையில் வெற்றி
-காலிறுதிப் போட்டியில் விமானப்படை அணியோடு 4-2 என்ற அடிப்படையில் வெற்றி (பெனால்டி முறையில்)
-அரையிறுதிப் போட்டியில் கொழும்பு விளையாட்டுக் கழகத்தோடு 1-0 என்ற அடிப்படையில் வெற்றி

 

முக்கிய வீரர்கள்

ரினொவ்ன் விளையாட்டுக் கழகம்

முஹமத் பசால்

ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் மிட்பீல்டர் முஹமத் பசால் உறுதியான விளையாட்டுப் போக்கைக் கொண்ட வீரராவார். நியு யங்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த முஹமத் பசால் சவுண்டர்ஸ் அணியுடனான தீர்மானமிகு அரையிறுதிப் போட்டியின் போது  பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறினார். எது எவ்வாறாயினும் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திர வீரர்களில் முதன்மையானவராக  முஹமத் பசால் திகழ்கிறார்.

ஜொப் மைக்கல்

ஜொப் மைக்கல் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின்  “forward ” திசையில் விளையாடும் வீரர். தனது  பெயரின் கீழ் 2 கோல்களை அடித்துள்ளார். சிறப்பாக விளையாடக் கூடிய இவர் இறுதிப் போட்டியில் தனது ஆதிக்கத்தை வெளிபடுத்தி சிறப்பாக விளையாடுவாரானால் அது இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு பாரிய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும்.

பசுல் ரஹ்மான்

ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் இன்னுமொரு மிட்பீல்டரான பசுல் ரஹ்மான் பந்தை சக வீரர்களிடையே பாஸ் செய்வதில் கில்லாடி. ரினொவ்ன் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் இராணுவ அணியை வீழ்த்த இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையும்.

இராணுவ விளையாட்டுக் கழகம்

சன்க தனுஷ்க

இறுதி போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகம் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்த வேண்டுமானால் இராணுவ அணியின் மிட்பீல்டர் சன்க தனுஷ்கவின் சேவை இன்றியமையாத ஒரு பங்களிப்பாக இருக்கும்.

சஜித் குமார

சஜித் குமார  இராணுவ விளையாட்டுக் கழகத்தின் “forward ” திசையில் விளையாடும் வீரர். தனது பெயரின் கீழ் 3 கோல்களை அடித்துள்ளார். இவரும் இராணுவ விளையாட்டுக் கழக அணியில் ஒரு முக்கிய வீரராகக் கருதப்படுகிறார்.

முஹமத் இஸ்ஸடீன்

இராணுவ விளையாட்டுக் கழகத்தின்  “forward ” திசையில் விளையாடும் மற்றுமொரு திறமை வாய்ந்த வீரரான முஹமத் இஸ்ஸடீன் இந்தத் தொடரில் மிக அற்புதமாக விளையாடி 10 கோல்களை அடித்துள்ளார்.கொழும்பு விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முஹமத் இஸ்ஸடீன் காயம் அடைந்ததால்  இறுதிப் போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்ற பிரார்த்தனையில் இராணுவ விளையாட்டுக் கழகம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முன்னைய சந்திப்புகள்

இதற்கு முன் இந்த இரண்டு அணிகளும் டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் 2 தடவைகள் மோதியுள்ளன. அந்த இரண்டு தடவைகளிலும் போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு டயலொக் சம்பியன்ஸ் லீக்  சுப்பர் 8 போட்டியின் போது

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்யின் சுப்பர் 8 சுற்றுத் தொடரின் போது இந்த இரண்டு அணிகளும் மோதி இருந்தன. ஆனால் இப்போட்டி 1-1 என்ற ரீதியில் சமநிலையில் நிறைவு பெற்றது.

இப்போட்டியில் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக ஒஜின்கிய ஒரு கோலை அடிக்க இராணுவ விளையாட்டுக் கழகத்தின் சார்பாக சஜித் குமார ஒரு கோலை அடித்தார்.

2015ஆம் ஆண்டு டயலொக் சம்பியன்ஸ் லீக் குழு நிலை லீக் போட்டியின் போது

அதேவேளை 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் குழு நிலை லீக் போட்டியின் போது இந்த இரண்டு அணிகளும் மோதி இருந்தன. அந்தப் போட்டியிலும் இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு கோல்களைப் போட்டு இருந்தது. இதனால் இப்போட்டி  சமநிலையில் நிறைவு பெற்றது.

இப்போட்டியில் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக முஹமத் பசால்  ஒரு கோலை அடிக்க இராணுவ விளையாட்டுக் கழகத்தின் சார்பாக மதுஷன் டி சில்வா ஒரு கோலை அடித்தார்.

இறுதிக் கூற்று

சமீபத்திய முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த இறுதிப் போட்டியை மட்டிட முடியாது. இறுதிப் போட்டி என்பதால் நிச்சயாமாக ஒரு தீர்க்கமான போட்டியாக அமையும். இராணுவ விளையாட்டுக் கழகம் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் மிட்பீல்ட் வீரர்கள் பந்தை பாஸ் அதாவது பகிர்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தோடு அரையிறுதிப் போட்டியில் காயம் அடைந்த முஹமத் இஸ்ஸடீனின் உடற் தகுதி நிலை நலமாக அமைவது இராணுவ விளையாட்டுக் கழகத்தின் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் ரமலான் நோன்பு காலத்தில் விளையாடுவதால் அவர்களது விளையாட்டு வலிமை/சக்தி ஒரு முக்கிய காரணியாக அமையும்.

ஒட்டு மொத்தமாக சனிக்கிழமை இரவு 7மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி ஒரு உற்சாகமான போட்டியாக அமையும். இந்தப் போட்டியை கொழும்பு சுகததாச மைதானத்தில் வந்து பார்க்க முடியாதவர்கள் இந்த போட்டியை குதுகலமாக ThePapare.com இன் மூலம் நேரடியாக கண்டு களிக்கலாம்.