டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து தொடர் அடுத்த மாதம் ஆரம்பம்

184

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டாவின் பூரண அனுசரணையுடன் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகள் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. 

ஹொங்கொங்கை இலகுவாக வீழ்த்திய இலங்கை வீரர்கள்

மியன்மாரில் தற்போது நடபெற்று வரும் 23 ……..

கடந்த 25 வருடங்களாக இடம்பெற்றுவரும் இலங்கையின் முன்னணி கரப்பந்து போட்டித் தொடரான ஜனாதிபதி தங்கக் கிண்ணத் தொடருக்கு தொடர்ந்து 14ஆவது முறையாகவும் டயலொக் ஆசியாட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த தொடரை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (06) இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியபலாபிடிய, அதன் செயலாளர் ஏ.எஸ் நாலக, டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடக பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இத்தொடர் மீதான ஆர்வம் நாடு பூராகவும் பரவியுள்ள நிலையில் இம்முறை போட்டித் தொடரில் 2,500 இற்கும் அதிகமான அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40,000 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஆண், பெண் என இரு பாலாருக்கும் இடம்பெறும் இத்தொடரின் முதல் கட்டம் மாவட்ட மட்டத்திலும், இரண்டாவது கட்டம் தேசிய மட்டத்திலும் இடம்பெறவுள்ளது. மாவட்ட மட்டப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. 

Photos: Press Conference | Dialog President’s Gold Cup Volleyball Championship 2019

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து தொடர் திறந்த போட்டிகள் மற்றும் 22 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டிகள் என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றன. எனினும், இம்முறை முழுமையாக திறந்த போட்டியாக இடம்பெறும் இந்த போட்டித் தொடரின் தேசிய மட்டப் போட்டிகள் இரண்டு முறைகளில் இடம்பெறும். 

கடந்த வருடங்களில் இடம்பெற்ற தொடர்களில் மாவட்ட மட்டத்தில் சம்பியனாகத் தெரிவாகும் அணிகள் மாத்திரமே தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தன. எனினும் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்திற்கு அமைய, மாவட்ட மட்டத்தில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகளுக்கு தேசிய மட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. குறித்த அணிகள் ஜனாதிபதி தங்கக் கிண்ணம் மற்றும் ஜனாதிபதி சவால் கிண்ணம் ஆகிய இரண்டு கிண்ணங்களுக்காக மோதும் 

ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து தொடர் 

இந்த தொடரின் ஆரம்ப கட்டமாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் போட்டிகளில் சம்பியன்களாக தெரிவாகும் அனைத்து அணிகளும் (ஆண் / பெண்) தேசிய மட்டத்தில் ஜனாதிபதி தங்கக் கிண்ணத்திற்காக போட்டியிடும். 

ஜனாதிபதி சவால் கிண்ண கரப்பந்து தொடர் 

இந்த தொடரின் ஆரம்ப கட்டமாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அனைத்து அணிகளும் (ஆண் / பெண்) தேசிய மட்டத்தில் ஜனாதிபதி சவால் கிண்ணத்திற்காக போட்டியிடும். 

போட்டித் தொடர்களில் விளையாடும் அனைத்து வீரர்களும் தாம் பங்கு கொள்ளும் மாவட்டத்திற்கு உரிய, தமது பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்தது 3 வருடங்கள் பதிவை மேற்கொண்டவராக இருத்தல் வேண்டும். 

அதேபோன்று, தேசிய மட்டத்திந்கு தெரிவாகி வரும் அணிகள், மாவட்ட மட்டத்தில் உள்ள ஏனைய சிறந்த வீரர்களையும் தமது அணிக்குள் உள்வாங்க முடியும் எனவும் போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 

போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகள் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, அதனை எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் தமது மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் அல்லது கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

செயலாளர், 

இலங்கை கரப்பந்து சம்மேளனம், 

33, டொரின்டன் இடம், 

கொழும்பு 07  

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<