அம்பலாங்கொட தர்மசோக கல்லூரி, இந்தப் பருவகால கிரிக்கெட் போட்டிகளில் பிரசித்திபெற்ற பல பாடசாலைகளை சவாலுக்குட்படுத்தி தங்களுடைய பாடசாலைக்கு கீர்த்தி நாமத்தை ஈட்டிக்கொடுக்க காத்திருகின்றது.

தர்மசோக கல்லூரி பற்றிய சிறிய கண்ணோட்டம்

1913இல் முதலியார் சாண்டியாகோ தோமஸ் டி சில்வா என்பவர் தனது சொந்தமான சொத்துக்களை செலவழித்து 15 மாணவர்களுடன் இந்த கல்லூரியை ஆரம்பித்து, அதனை அபிவிருத்தி செய்தார்.

மிக சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை தர்மசோக கல்லூரிக்கு உண்டு. இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் T2 போட்டிகளில் விளையாடி வரும் உபுல் தரங்க தர்மசோக கல்லூரி உருவாக்கிய ஒரு வீரராவார். அதே சமயத்தில், இலங்கை அணியின் துணைத்தலைவர் மற்றும் அதிரடி ஆட்ட வீரர் தினேஷ் ஷந்திமல், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு விளையாடுவதற்கு முன்னர் இங்குதான் கல்வி கற்று, கிரிக்கெட்டையும் விளையாடினார்.  

அத்துடன், 2004ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு அறிமுகமாகி, 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 ஓட்டங்களை பெற்ற சமன் ஜயந்தவும் இக்கல்லூரியால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு சிறந்த கிரிக்கெட் வீரராவார்.

2016/2017 பருவகாலம்  

இம்முறை C குழுவில் போட்டியிடும் இக்கல்லூரி அணி, சிறந்த முறையில் விளையாடி வருகின்றது. நடைபெறவுள்ள போட்டிகளிலும் தொடர்ந்து சிறந்த முறையில் விளையாடும் பட்சத்தில் தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை இவ்வணி பெறும்.

இந்த பருவகால போட்டிகளில் தர்மராஜா கல்லூரியுடனான போட்டி சமநிலையில் முடிவுற்ற அதேநேரம், குருகுல மற்றும் மொறட்டு கல்லூரியுடனான போட்டிகளில் இக்கல்லூரி வெற்றியை பதிவு செய்தது. அதேபோன்று, மேலும்ஸாஹிரா கல்லூரியுடனான போட்டியில் முதல் இன்னிங்சில் வெற்றி பெற்று, 2016/17 ஆண்டுக்கான பருவகால போட்டிகளில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது தர்மசோக கல்லூரி.  

தர்மசோக கல்லூரியின் முக்கிய வீரர்கள்

2016/17 பருவகால போட்டிகளுக்கு தர்மசோக கல்லூரியின் முக்கிய வீரர்கள் பட்டியலில் முதலில் இருப்பதுஉஷான் இமந்த. தொடர்ந்து நான்கு வருடங்களாக திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர், கடந்த பருவகால போட்டிகளின்போது ஒன்பது போட்டிகளில் 31 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இவர், இம்முறை போட்டிகளிலும் தனது அனுபவத்தினை பயன்படுத்தி தர்மசோக கல்லூரியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மசோக கல்லூரியின் புகைப்படத் தொகுப்பு

கடந்த பருவகால போட்டிகளில் அணியைத் தலைமை தாங்கிய ஐந்து வருடகால அனுபவம் கொண்ட கவீஷ் குமார, 600 க்கும் மேலான ஓட்டங்களை கடந்த பருவகால போட்டிகளில் பெற்றுக்கொண்டார். சிறந்த முறையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த பருவகால போட்டிகளில் மேலும் சிறப்பாக செயல்படுவார்.

அதேநேரம்தினுக்க தில்ஷானும் கடந்த பருவகால போட்டிகளில் 600 க்கும் மேலான ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஒருவர். இவரும் இம்முறை தனது துடுப்பாட்டத்தின்மூலம் நேர்த்தியான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளார்.

வலது கை சுழல் பந்து வீச்சாளர் கவிந்து நதீஷன் கடந்த பருவகால போட்டிகளில் 60 விக்கெட்டுக்களுக்கும் மேல் கைப்பற்றியவர். இம்முறை அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது.

15 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் துணைத்தலைவராகவும் மாகாண அணியில் தலைவராகவும் இருந்து வழிநடத்திய ரவீந்து ராஷந்த தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட தனது அனுபவங்களை தர்மசோக கல்லூரியின் வெற்றிக்காக இந்த பருவகால போட்டிகளில் உபயோகப்படுத்த காத்திருக்கிறார்.

பயிற்சியாளர்கள்

மூன்றாவது வருடமாகவும் அணிக்கான பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள இசுரு அனுஷ்க, வீரர்களின் கலாசாரம்பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருக்கும் ஒரு சிறந்த பயிற்சியாளராவார்.

பாடசாலையின் பழைய மாணவரான திலான் மதுரங்க, இசுரு அனுஷ்கவிற்கு உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

தசன் நய்டுவாவடு கடந்த ஒன்பது வருடங்களாக தர்மசோக கல்லூரி அணியின் பொறுப்பாளராக கடமையாற்றி, அணியை வழிநடத்தி வருகிறார்.

இறுதியாக,

இந்த பருவகால போட்டிகளில் நான்கு போட்டிகளில் இரு வெற்றிகளை பெற்று நல்லதொரு ஆரம்பத்தை பெற்றிருக்கும் தர்மசோக கல்லூரி, 19 வயதுக்குட்பட்ட முன்னணி கிரிக்கெட் பாடசாலைகளை வென்று குறைந்த பட்சம் 8 அணிகளின் சுற்றிலாவது போட்டியிட எதிர்பார்த்துள்ளது