மன்ரோவின் அதிரடியுடன் CPL கிண்ணத்தை வென்றது ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ்

164

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக்கின் (CPL) இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்ற இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கிரிஸ் கிரீன் தலைமையிலான கயானா அமெஷன் வொரியர்ஸ் அணி மற்றும் டெரன் பிராவோ தலைமையிலான ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று அதிகாலை பலப்பரீட்சை நடத்தின.

கட்டாய வெற்றிக்காக ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று (15) ஆரம்பமாகிய 14…

இதில் தொடர்ச்சியாக தங்களது இரண்டாவது கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) கிண்ணத்தை கைப்பற்றிய ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணி, சிபிஎல் கிண்ணத்தை மூன்று முறை கைப்பற்றிய ஒரே ஒரு அணியென்ற பெருமையையும் இன்று பெற்றுக்கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் டெரன் பிராவோ, கயானா அமெஷன் வொரியர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி களமிறங்கிய கயானா அணி, தங்களது அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கெமரொன் டெல்பொர்ட்டின் விக்கெட்டை முதல் பந்திலேயே இழந்தது. குறித்த விக்கெட்டை அலி கான் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

பின்னர், களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் லுக் ரோன்கி, ஹெட்மையர் மற்றும் ஜேசன் மொஹமட் ஆகியோர் மாத்திரமே துடுப்பாட்டத்தில் அணிக்கு பங்களிப்பை வழங்கிய நிலையில், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அரங்கு திரும்பியிருந்தனர். இதன்காரணமாக 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்த கயானா அணி 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ரோன்கி அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற, ஜேசன் மொஹமட் 24 ஓட்டங்களையும், ஹெட்மையர் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுத்த கெரி பீரி 3 விக்கெட்டுகளையும், டெரன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

>> யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்”

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி கொலின் மன்ரோ மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகியோரின் சிறப்பாட்டத்தின் உதவியுடன், 17.3 ஓவர்கள் 150 ஓட்டங்களை எட்டி, இலகுவான வெற்றியை பெற்றது. நைட் ரைடர்ஸ் அணிசார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய கொலின் மன்ரோ 39 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை விளாசினார். அத்துடன், மெக்கலம 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.

இதனடிப்படையில் 2015ம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்த நைட் ரைடர்ஸ் அணி, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றி, மூன்று தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றிய ஒரே அணியென்ற சாதனையை பதிவுசெய்துள்ளது.

போட்டி சுருக்கம்

கயானா அமெஷன் வொரியர்ஸ்147/9 (20), லுக் ரோன்கி 44, ஜேசன் மொஹமட் 24, கெரி பீரி 3/29

ட்ரைன்பகோ நைட் ரைடர்ஷ் –  150/2 (17.3), கொலின் மன்ரோ  68, பிரெண்டன் மெக்கலம் 39, ரோமாரியோ செஃப்பர்ட் 1/29

  • ஆட்டநாயகன்கெரி பீரி
  • தொடர் ஆட்டநாயகன்கொலின் மன்ரோ
  • அதிக ஓட்டங்கள்கொலின் மன்ரோ 567 ஓட்டங்கள் (13 இன்னிங்ஸ்)
  • அதிக விக்கெட்டுகள்பவாட் அஹமட் 23 விக்கெட்டுகள் (13 இன்னிங்ஸ்)