பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஆஸி. அணி

1647

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதை அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருப்பதோடு, ஸ்டீவன் ஸ்மித்தை அணித் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கும்படி அவுஸ்திரேலிய அரசு கோரியுள்ளது.

தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கெமரூன் பான்க்ரொப்ட் பந்தை சேதப்படுதியதாக கூறியதோடு, இந்த முன்கூட்டிய திட்டம் பற்றி தான் அறிந்திருந்ததாக அணித் தலைவர் ஸ்மித் ஒப்புக்கொண்டார்.

பான்க்ரொப்ட் தனது காற்சட்டை பைக்குள் இருந்து மஞ்சள் நிறப் பொருள் ஒன்றை வெளியே எடுப்பது தொலைக்காட்சியை வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது. அது ஒரு டேப் (Tape) என்று பான்க்ரொப்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.

பந்தின் தன்மையை மாற்ற தமக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக 25 வயதான அந்த வீரர் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை (24) போட்டி முடிவில் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை எந்த உத்தியை தவறவிட்டது?

நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 போட்டிகள், இலங்கை…

‘இது மிகப்பெரிய தவறு’ என்று ஒப்புக்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், தான் தலைமை பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது பற்றி அணியின் தலைமை குழுவுடன் பேசியதாக கூறிய ஸ்மித், (இந்த செயல்) போட்டியில் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று கருதியதாகவும் தெரிவித்தார். இந்த டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் முடியும்போது தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த அணி போட்டியில் 294 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தற்பொழுது தொடர் சமநிலையில் உள்ளது.

என்ன நடந்தது?

போட்டியின் போது பான்க்ரொப்டிடம் பந்து வீசப்பட்டபோது அவர் தனது காற்சட்டை பையில் இருந்து மஞ்சள் நிற சிறு பொருள் ஒன்றை எடுத்து பந்தின் ஒரு பக்கத்தில் ஏதோ செய்வது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் காணமுடிந்தது. அந்த மஞ்சள் நிறப் பொருள் சிறு கற்துண்டுகளை சுற்றிய டேப் என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டெரன் லீமன் தன்னிடம் இருந்த வோக்கி டோக்கி மூலம் 12ஆவது வீரர் பீட்டர் ஹான்ட்ஸ்கோர்ன்பை தொடர்புகொண்டார். அதனை அடுத்து ஹான்ட்ஸ்கோர்ன்ப் மைதானத்திற்கு சென்று பான்க்ரொப்டுடன் உரையாடியதை காணமுடிந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து பான்க்ரொப்ட் தனது காற்சட்டை பைக்குள் இருந்த அந்த மஞ்சள் நிற சிறு பொருளை எடுத்து அவசரமாக தனது உள்ளாடைக்குள் போடுவதையும் தொலைக்காட்சி மூலமாக காணமுடிந்தது.

இந்நிலையில் நடுவர்களான ரிச்சட் லில்லிங்வேர்த் மற்றும் நிகேல் லொங் ஆகியோர் பான்க்ரொப்டை அழைத்து தனது காற்சட்டை பைகளை வெளியே எடுத்து காட்டும்படி கேட்டுக் கொண்டனர். எனினும் தன்னிடம் எதுவும் இல்லை என்று பான்க்ரொப்ட் நடுவர்களை நம்பவைத்ததை அடுத்து நடுவர்கள் போட்டியை தொடர அனுமதித்தனர்.

மன்னிப்புக் கேட்டனர்

மூன்றாவது நாள் போட்டி முடிவை அடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பான்க்ரொப்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

”இதனால் எனது நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்புக்கு நான் முகம்கொடுப்பேன்” என்று பான்க்ரொப்ட் கூறினார். ”நான் பலவந்தப்படுத்தப்பட்டதாக நினைக்கவில்லை. சுற்றிவர நூற்றுக்கணக்கான கெமராக்கள் இருந்ததால் பயமடைந்தேன். துரதிஷ்டவசமாக நான் தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்தேன். என்றாலும் எனது செயலுக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்ன நடந்தது என்பதையிட்டு நான் பெருமை அடையவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறும்போது,

”ஆடுகளத்தில் இருந்து சிறு கற்கள் மற்றும் டேப்பை பயன்படுத்த சந்தர்ப்பம் இருப்பதை கண்டு பந்தின் தன்மையை மாற்ற நான் நினைத்தேன். நான் செய்வதை திரையில் கண்டதை அடுத்து அதிகம் பயப்பட்டேன். அதனால் காற்சட்டைக்குள் இருப்பதை காட்டிக்கொடுத்துவிட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மகளிர் அணிக்கு மீண்டும் ‘வைட்வொஷ்’ தோல்வி

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள்…

இதுபற்றி தலைவர் ஸ்டீவன் ஸ்மித் குறிப்பிடும்போது, ”நாம் மோசமான செயல் ஒன்றை செய்தோம். எமது செயலுக்கு நாம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பயிற்சியாளர்கள் பங்கேற்கவில்லை.

உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்க்ரொப்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் அணித் தலைவராகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகின்றன. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது.

இந்த செயலில் இருந்து விலகி இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன். நான் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளேன். இது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குரிய செயலல்ல. நான் மிகவும் வருந்துகிறேன்” என்று ஸ்மித் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அரசு அழுத்தம்

இந்த சம்பவம் குறித்து, அதிர்ச்சியும் கடும் ஏமாற்றமும் அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட், பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இரு மூத்த அதிகாரிகள் தென்னாபிரிக்கா சென்று, இது தொடர்பான தகவல்களை திரட்டவுள்ளனர். எனினும் ஸ்மித் தொடர்ந்து தலைமை பதவியில் நீடிக்கவுள்ளார்.

”தற்போதைய தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் ஊடாக தற்போதைய செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவிருக்கிறோம். எமக்கு தெளிவான ஒரு முடிவு கிடைத்ததும் இதுபற்றி நாம் மேலும் கருத்து கூறுவோம்” 

என்று சதர்லாண்ட் குறிப்பிட்டார்.

ஆனால் ஸ்மித்தை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கும்படி அவுஸ்திரேலிய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த சம்பவம் ”அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை தந்ததாக” அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டுள்ளார். ”தென்னாபிரிக்காவிலிருந்து இன்று காலை வந்த செய்தி எமக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது” என்று அவர் தனது கவலையைத் வெளிப்படுத்தினார்.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் டெரன் லீமன் ஆகியோரை நீக்குவதை தவிர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு வேறு வழியில்லை என்று அவுஸ்திரேலிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் சைமன் கடிச் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ICC போட்டி மத்தியஸ்தரின் விசாரணைக்கு பின்னரே இந்த விடயம் குறித்து ICC என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரிய வரும்.

 பந்தை சேதப்படுத்துவது புதிதல்ல

1994இல் லோட்ஸில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து அணித் தலைவர் மைக் ஆர்தடன் மீது எழுந்த குற்றச்சாட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்தடன் தனது காற்சட்டை பைக்குள் மண்ணை வைத்துக்கொண்டு தனது கைகளை உலர வைத்து பந்தை சேதப்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

ஏழு ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக தொலைக்காட்சி ஆதாரங்கள் காட்டியதை அடுத்து அவருக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. டென்டுல்கர் பந்தில் இருந்த புற்களை அகற்றுவதே தொலைக்காட்சியில் தெரிந்தது. எனினும் அவர் நடுவரின் அனுமதி இன்றி பந்தை சுத்தம் செய்ததாகவே கூறப்பட்டது.

ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய…

எனினும் 2006ஆம் ஆண்டு ஓவல் டெஸ்ட் போட்டியில் அதிகம் சுவிங் செய்வதற்காக பந்தின் தன்மையை மாற்றியதாக பாகிஸ்தான் அணி மீது குற்றம் சாட்டிய நடுவர்களான டெர்ரல் ஹெயார் மற்றும் பில்லி டொக்ரோவ், எதிர்த்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஐந்து மேலதிக ஓட்டங்களை வழங்கியது அதிக பிரபலமான சம்பவமாகும்.

அந்த தண்டனையை ஏற்க மறுத்து பாகிஸ்தான் அணி போட்டியில் தொடர்ந்து விளையாடாததால் தோல்வி அறிவிக்கப்பட்டது டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இருந்தது.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து ICC விசாரணை குழுவால் பாகிஸ்தான் அணித் தலைவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டதோடு, போட்டியில் ஆட மறுத்ததற்காக அவருக்கு நான்கு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த போட்டியின் முடிவு சமநிலையில் முடிந்ததாக மாற்றப்பட்டது.