ஆசிய சவால் கிண்ணத்தின் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை

180
Sri Lanka Vs. Hong Kong

இலங்கையில் முதல் முறையாக நடைபெற்று வருகின்ற ஆசியாவின் 8 அணிகள் பங்கேற்கும், ஆடவருக்கான ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி முதல் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமாகிய இந்த போட்டித் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் – ஈராக் அணிகள் மோதியதுடன், இரண்டாவது போட்டியில் மொங்கோலியா ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதியிருந்தன.

ஆசியாவில் சம்பியனாகும் கனவுடனே களமிறங்கினோம் – திலகா ஜினதாச

இதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் இலங்கை உட்பட எட்டு அணிகளும் கலந்துக்கொண்ட நிலையில், ஜனாதிபதி கிண்ணத்தை திறந்துவைத்தார்.

வரவவேற்பு நிகழ்வுகளை தொடர்ந்து குழு A இல் அங்கம் வகிக்கும் இலங்கை – ஹொங்கொங் அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை ஆடவர் அணி 3-0 என்ற நேர் செட் கணக்கில் இந்த போட்டியின் வெற்றியை தக்கவைத்தது.

போட்டியின் முதல் செட்டின் ஆரம்பத்திலிருந்து ஹொங்கொங் அணியை விட புள்ளிகளில் முன்னிலையைப் பெற்றிருந்த இலங்கை அணி 25-15 என செட்டை இலகுவாக கைப்பற்றியது. முதல் செட் 23 நிமிடங்களுக்குள் முடிவையும் எட்டியிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஹொங்கொங் அணி சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டியின் முதல் தொழிநுட்ப இடைவேளையில் இலங்கை அணி 8-3 என முன்னிலைப்பெற்றிருந்த போதும், இரண்டாவது தொழிநுட்ப இடைவேளையில் 14-16 என்ற புள்ளிகள் என ஹொங்கொங் நெருங்கியது. எனினும் இறுதி நேரத்தில் சிறப்பாக ஆடிய இலங்கை அணி 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை கைப்பற்றி, போட்டியில் 2-0 என முன்னிலையடைந்தது.

இதனையடுத்து இலங்கை அணியின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டில் ஹொங்கொங் அணி தங்களுடைய ஆட்டத்தை மேலும் வலுவாக வெளிப்படுத்தியது. இரண்டு அணிகளும் நெருக்கமான புள்ளிகளுடன் போட்டியில் முன்னேற செட்டின் இரண்டாவது தொழிநுட்ப இடைவேளையில் இலங்கை அணி 16-15 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலைபெற்றது. ஆனால் தங்களுடைய அனுபவத்தை அடிப்படையாக வைத்து இறுதியில் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 25-22 என வெற்றிபெற்றது.

பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் விதூஷா, சச்சினி புதிய போட்டி சாதனை

இந்த வெற்றியின் அடிப்படையில் தங்களுடைய குழுவில் முதலிடத்தை பிடித்துள்ள இலங்கை அணி, நாளைய (16) தினம் மலேசிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இன்று நடைபெற்ற ஏனைய போட்டிகளின் முடிவுகள்

பங்களாதேஷ் – ஈராக்

  • ஈராக் 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றி.
  • செட் புள்ளிகள் – 25-20, 18-25, 17-25, 25-21, 09-15

ஐக்கிய அரபு இராச்சியம் – மொங்கோலியா

  • மொங்கோலிய அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் – 31-29, 25-22, 20-25, 25-21

மலேசியா – சவூதி அரேபியா

  • சவூதி அரேபியா 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
  • செட் புள்ளிகள் – 25-17, 25-15, 18-25, 25-17  

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<