ஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

1884
Photo courtesy - Asian Cricket Council FB

ஆசியக் கிரிக்கெட் பேரவை (ACC) ஆசிய நாடுகளின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்திவரும் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி ஹொங்கொங் அணியினை 10 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தி அதிரடி வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி

ஆசிய நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட…

எட்டு அணிகள் பங்குபெறும் (A, B என இரண்டு குழுக்களாக) பங்குபெறும் இந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் நேற்று (29) பங்களாதேஷில் ஆரம்பமாகியிருந்தது. தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை 6 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியிருந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி அதே உற்சாகத்தோடு ஹொங்கொங் இளம் அணியினை இன்று (29) சிட்டகொங் சாஹூர் அஹ்மட் செளத்ரி மைதானத்தில் வைத்து எதிர்கொண்டிருந்தது. 

குழு B அணிகளின் மூன்றாவது லீக் ஆட்டமாக அமைந்திருந்த இப் போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவர் நிப்புன் தனன்ஞய முதலில் ஹொங்கொங் வீரர்களை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஹொங்கொங் அணிக்கு மிகவும் மோசமான தொடக்கம் காத்திருந்தது. ஆரம்ப வீரர்கள் இருவரையும் கலன பெரேரா தனது வேகத்தின் மூலம்  ஓட்டங்கள் ஏதுமின்றிய ஓய்வறை அனுப்பினர். தொடர்ந்து இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களான துனித் வெல்லால்கே மற்றும் சஷிக்க துல்ஷான் ஆகியோர் அனுபவம் குறைந்த ஹொங்கொங் அணியின் துடுப்பாட்டத்துறையினை மிகவும் இன்னலான நிலைக்கு கொண்டு சென்றனர்.

பின்ன,ர் எந்தவீரரும் ஜொலிக்காத நிலையில் ஹொங்கொங் அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 56 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

ஹொங்கொங் 19 வயதின் கீழ் அணியின் துடுப்பாட்டத்தில் ஒரேயொரு வீரர் (அதித் கொரவரா) மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், இலங்கைத் தரப்பின் பந்துவீச்சு சார்பாக மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரியின் சஷிக்க துல்ஷான் வெறும் 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்ளை கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்ததோடு, துனித் வெல்லால்கே மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் பதம் பார்த்திருந்தனர். 

இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 57 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, வெற்றி இலக்கினை வெறும் 9.2 ஓவர்களில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காது 58 ஓட்டங்களுடன் அடைந்தது.

இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்

பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம்…

இலங்கை சார்பான அணியின் துடுப்பாட்டத்தில், நவோத் பரணவிதான 35 ஓட்டங்களினையும், நிஷான் மதுஷ்க 21 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்று இலகு வெற்றி ஒன்றினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இலங்கையின் இளம் வீரர், சஷிக்க துல்ஷானுக்கு வழங்கப்பட்டது. ஹொங்கொங் அணியுடனான வெற்றியுடன் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்திருக்கும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை வரும் செவ்வாய்க்கிழமை (02) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி