விமானப்படை, கிரிஸ்டல் பெலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில்

266

டயலொக் சம்பியன் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், இன்றைய தினம் மிகவும் விறுவிறுப்பான போட்டியொன்று கம்பளை வீகுலுவத்த மைதானத்தில் நடைபெற்றது. கம்பளை கிரிஸ்டல் பெலஸ் மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியானது  இரு அணிகளதும் பலத்த போராட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

போட்டியை, இப்பருவகாலத்தின் தொடக்கம் முதல் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத இலங்கை விமானப்படை  அணியே தொடக்கி வைத்தது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் எதிரணியின் எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிந்தது.

போட்டி ஆரம்பித்து 11 ஆவது நிமிடத்தில் விமானப்படை அணி கோலை பெறுவதற்கான முதலாவது முயற்சியை எடுத்தது. இம்முயற்சியின் போது ஹர்ஷ பெர்னான்டோ மூலம் இடது பக்க மூலையிலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை நுவன் வெல்கமகே தனது பாதத்தால் தட்டி கோலாக்க முயன்றார். எனினும் போதிய வேகம் காணப்படாமையினால் கோல் காப்பாளர் பந்தை இலகுவாக கைப்பற்றிக் கொண்டார்.  

அதனை தொடர்ந்து 14 ஆவது நிமிடத்தில் கோலிற்கு மிக அருகிலிருந்து கிடைக்கப் பெற்ற ப்ரீ கிக் (Free Kick) வாய்ப்பை கோலாக்குவதில் கிரிஸ்டல் பெலஸ் அணியின் அய்ஸக் அபா (Isaac Aba) தோல்வியுற்றார்.

மிக நீண்ட நேரமாக இரு அணிகளும் எதிரணிக்கு சிறந்த வாய்ப்புக்களை வழங்காமல் தடுத்தாடுவதில் சிறப்பாக செயற்பட்டன. எனினும் போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் தேவிந்த பண்டார மற்றும் கவிந்து இஷான் ஆகியோரிற்கிடையில் நடைபெற்ற சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின், கவிந்து இஷான் பெற்ற பந்தை கோலை நோக்கி வேகமாக உதைந்தார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

>60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி<

அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்களின் பின்னர் ஜீன் பிரான்ஸிகோ (Jean Francisco) மத்திய களத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் லாவகமாக வழங்கிய பந்தை பெற்று கோலாக்குவதற்கு அய்ஸக் அபா முயற்சித்தார். எனினும் விரைவாக சுதாகரித்துக் கொண்ட விமானப்படையின் பின்கள வீரர்கள் பந்தை எல்லைக் கோட்டை தாண்டி வெளியேற்றினர்.

போட்டியின் முதல் பாதிக்கான இறுதி வாய்ப்பை இலங்கை விமானப்படை அணி, போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் போது பெற்றது. எனினும் அவ்வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த துமிந்த தவறவிட்டார். அத்துடன் சில நிமிடங்களில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 0 – 0 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்

இரண்டாம் பாதியை கிரிஸ்டல் பெலஸ் அணி ஆரம்பித்த போதும் அதிகமான சிறந்த வாய்ப்புக்களை இலங்கை விமானப்படை  அணியே பெற்றது.

இரு அணிகளும் மிக நீண்ட நேரமாக பல சிறந்த முயற்சிகளை எடுத்தபோதும், போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர், வலது பக்கத்திலிருந்து தேவிந்த பண்டார தரை வழியாக வலதுபக்க கோல் கம்பங்களிற்கு அருகில் உள்ளனுப்பிய பந்தை, கவிந்து இஷா முன்களத்தின் இடது பக்கத்திலிருந்து வேகமாக ஓடிச்சென்று தனது இடது பாதத்தின் பின் பகுதியால் உதைந்து (Back Heel) கோலாக்கினார். எனினும் அம்முயற்சியை ஓப்ஸைடாக (Off Side) அறிவித்த எல்லைக் கோட்டிலிருந்த நடுவர், கோலை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

சிறந்ததொரு முயற்சியை மேற்கொண்ட விமானப்படை அணி மீண்டும் அதே உத்வேகத்துடன் போட்டியின் 78 ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு மீண்டும் சவால் விடுத்தது. துமிந்த மூலம் மத்திய களத்திலிருந்து தரை வழியாக பெனால்டி எல்லையின் வலது பக்கத்திற்கு உள்ளனுப்பப்பட்ட பந்தை சிறப்பாக பெற்ற கவிந்து இஷான், பின்கள வீரர்களின் சவால்களையும் தாண்டி கோலை நோக்கி பந்தை கொண்டு சென்றபோதும், சிறப்பாக செயற்பட்ட கோல் காப்பாளர் பெனால்டி எல்லையை விட்டும் பந்தை தட்டிவிட்டார்.

>> பலம் கொண்ட மற்றொரு அணியை வீழ்த்தியது சுபர் சன் <<

விமானப்படை வீரர்கள் போட்டியை ஆக்கிரமிப்பதை உணர்ந்த கிரிஸ்டல் பெலஸ் அணி வீரர்கள், போட்டியின் 81 ஆவது நிமிடத்தில தமது ஆதிக்கத்தை உறுதி செய்ய முயன்றனர் முஹமட் இபாம் மத்திய களத்தின் இடது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பிய பந்தை, முஹமட் பாஸித் பந்தானது தரையை அடையும் முன்பே சிறந்த முறையில் கோலை நோக்கி உதைந்தார். எனினும் கோலை நோக்கி வேகமாக சென்ற பந்தை, விரைவாக செயற்பட்ட பின்கள வீரர்கள் பந்தை தடுத்தாடினர்.

போட்டியின் இறுதித்தருவாயில் அதாவது 91 ஆவது நிமிடத்தில், விமானப்படை வீரரான கவிந்து இஷான் மூலம் சிறந்ததொரு முயற்சி எடுக்கப்பட்டது. இம்முயற்சியின் போது கவிந்து இஷான்  எல்லைக்கோட்டிற்கு வெளியேயிருந்து வழங்கப்பட்ட பந்தைப் பெற்று, பின்கள வீரர்களையும் சிறந்த முறையில் தாண்டி வலது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் பந்தை  உள்ளனுப்பினார். எனினும் சிறப்பாக உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்று கோலாக்குவதற்கு குறித்த நேரத்தில் எந்தவொரு வீரரும் பெனால்டி எல்லையில் காணப்படவில்லை.

இம்முயற்சியோடு மேலதிகமாக வழங்கப்பட்ட நேரமும் நிறைவடைய, நடுவர் போட்டியை நிறைவு செய்தார். இரு அணியினரும் எந்தவிதமான கோலையும் பெறாத பட்சத்தில் போட்டியானது வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 0 – 0 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்