60 மீற்றரில் உலகின் 3ஆவது வேகமான வீரரான யுபுன் அபேகோன்

124

தெற்காசியாவின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன அபேகோன் இத்தாலியில் நேற்றுமுன்தினம் (23) நடைபெற்ற இத்தாலி உள்ளக மெய்வல்லுனர்  தொடரில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி இலங்கை சாதனையை முறியடித்தார். 

ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டத்தின் தகுதிகாண் போட்டியில் களமிறங்கிய அவர்,  போட்டித் தூரத்தை 6.59 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், 2017இல் அவரால் குறித்த போட்டியை 6.78 செக்கன்களில்  ஓடி முடித்து நிலைநாட்டப்பட்ட இலங்கை சாதனையை மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முறியடித்தமை சிறப்பம்சமாகும்

அதுமாத்திரமின்றி, தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரத்தைப் பதிவுசெய்த யுபுன், ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியின் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.    

கடந்த ஐந்து வருடங்களாக இத்தாலியில் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற 25 வயதுடைய யுபுன், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற Galà dei Castelli மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.24 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்

தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் ப்ரியதர்ஷன

முன்னதாக, ஜேர்மனியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற என்ஹால்ட் ஜேர்மன் சர்வதேச மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தெற்காசிய சாதனை படைத்த யுபுன் ப்ரியதர்ஷன, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்து ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<