ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் திருகோணமலை டைனமிக் விளையாட்டுக் கழக அணிகள் இடையே நடைபெற்ற மாகாண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் (Intra Provincial Cricket Tournament) இறுதிப் போட்டியில், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மாகாண சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றது.
>> இலகுவான வெற்றிகளுடன் IPL தொடரை ஆரம்பித்த பெங்களூர், ராஜஸ்தான்!
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டிலான மாகாண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (02) மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டைனமிக் விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.
அதன்படி அவ்வணி வீரர்கள் 42.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை எடுத்தனர். டைனமிக் விளையாட்டுக் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் ராம்கி ரவீந்திரன் 56 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் சிவராசா நிரூஷன் 34 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யங் ஹீரோஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்வீரரான மொஹமட் பாஷில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ஜாபிர் அஹ்மட் மற்றும் MI. முஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் போட்டியின் வெற்றி இலக்கினை 29.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களுடன் அடைந்தது.
யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஏற்கனவே பந்துவீச்சில் அசத்தியிருந்த மொஹமட் பாஷில் இம்முறை அதிரடியான துடுப்பாட்டத்துடன் வெறும் 49 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் எடுத்தார். இவரோடு MI. முஜித் 30 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> சுபர் ஓவரில் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி
டைனமிக் விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சில் தயாளன் அரிநேசராசா, தனுஜிகன் கமலநாதன், ராம்கி ரவீந்திரன், ரிச்சர்ட் ஜெபதாஸ் நிவ்மன் மற்றும் கேசவக்ஸன் கமலநாதன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஏறாவூர் யங் ஹீரோஸ் அணிக்காக துடுப்பாட்டம் பந்துவீச்சு என இரண்டிலும் பிரகாசித்த மொஹமட் பாஷில் தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
டைனமிக் வி.க. – 163 (42.4) ராம்கி ரவீந்திரன் 41*(56), மொஹமட் பாஷில் 34/3 (10), MI. முஜித் 16/2(6), ஜாபிர் அஹமட் 29/2(7.4)
யங் ஹீரோஸ் ஏறாவூர் – 166/5 (29.2) மொஹமட் பாஷில் 69(49), தனுஜிகன் கமலநாதன் 39/1(10)
முடிவு – யங் ஹீரோஸ் ஏறாவூர் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















