தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஜோர்டன் ஜோன்சன் கடந்த போட்டிகளை போன்று இந்தப் போட்டியிலும் பிரகாசித்திருந்தார்.
இவர் அணிக்காக அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவறினர். அதேநேரம் இலங்கை அணிக்காக கடந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை சாய்த்த விஹாஷ் தெவ்மிக இந்தப் போட்டியிலும் அபாரமாக பந்துவீசினார்.
விஹாஷ் தெவ்மிக 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மல்ஷ தருபதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற மே.தீவுகள் இளையோர் அணி 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணிக்கு புலிந்து பெரேரா சிறந்த ஆரம்பம் ஒன்றை கொடுத்தார். இவர் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரவிசான் டி சில்வா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ருசாந்த கமகே அணிக்காக மற்றுமொரு சிறந்த ஓட்டக்குவிப்பை ஆரம்பித்தார். இவர் சிறப்பாக ஆடி தன்னுடைய அரைச்சதத்தை கடந்தார். இவர் 52 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.
மூன்று துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை கொடுத்த நிலையில், சாருஜன் சண்முகநாதன் மற்றும் தினுர கலுபான ஆகியோர் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப தொடங்கினர். இதன்மூலம் இன்றைய ஆட்டநேர நிறைவில் இலங்கை இளையோர் அணி 191 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாருஜன் சண்முகநாதன் 21 ஓட்டங்களையும், தினுர கலுபான 23 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இலங்கை இளையோர் அணி 64 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.