மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்வாது நாள் ஆட்டநேர, ஆரம்பத்தில் ஓட்டங்களை குவிக்க தவறிய போதும், தனன்ஜய டி சில்வாவின் அற்புதமான துடுப்பாட்ட சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 328 ஓட்டங்களை குவித்துள்ளது.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த போது, பெதும் நிஸ்ஸங்க சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
அறிமுக வீரர் சரித் அசலங்க 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்த போதும், பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்து, ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். எனினும், அரைச்சதம் கடந்த பெதும் நிஸ்ஸங்க துரதிஷ்டவசமாக 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மதியபோசன இடைவேளையின் போது, இலங்கை அணி 151 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய இலங்கை அணியை பொருத்தவரை, தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழக்கப்பட்டன. குறிப்பாக உபாதையுடன் களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் களமிறங்கி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 221 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
மத்திய வரிசையின் தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிசார்பாக, 9வது விக்கெட்டுக்காக தனன்ஜய டி சில்வா மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பகிர ஆரம்பித்தனர். அதன்படி, தேநீர் இடைவேளையின் போது, இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியை பொருத்தவரை, லசித் எம்புல்தெனிய மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் இன்றைய ஆட்டநேர இறுதிவரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாட, இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அற்புதமான டெஸ்ட் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தனன்ஜய டி சில்வா தன்னுடைய 8வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்ததுடன், ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை குவித்திருந்தார். மறுமுனையில், லசித் எம்புல்தெனிய 25 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் 9வது விக்கெட்டுக்காக 108 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 9வது விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய டெஸ்ட் இணைப்பாட்டத்தையும் பதிவுசெய்தனர்.
மே.தீவுகள் அணியை பொருத்தவரை வீரசாமி பெர்மோல் 3 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், கிரைக் பிராத்வைட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதேவேளை, இலங்கை அணியானது, தற்போது மே.தீவுகள் அணியைவிட 279 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.