இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு: இசுரு உதான

3438

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான, மற்றைய அணிகள் பற்றி சிந்திக்காமல் இன்று நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் முடிந்தளவு திறமையினை வெளிப்படுத்தி வெற்றியினைப் பெறுவதற்கு முயற்சி செய்வதாக குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் லீட்ஸ்ஹெடிங்லியில் இன்று (21) நடைபெறவுள்ள 27ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கைஇங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகள் மற்றும் 2 கைவிடப்பட்ட போட்டி முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. எனவே, இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கடைசி 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால், அந்த அணிக்கு இங்கிலாந்து அணியுடனான போட்டி வாழ்வாசாவா என்ற மோதல் என்பதில் சந்தேகமில்லை. தோற்றால் ஏறக்குறைய நடையை கட்ட வேண்டியது தான்.

இந்த நிலையில், இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இசுரு உதான நேற்று (20) நடைபெற்ற பயிற்சிகளின் பிறகு எமது இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில்,

”கடந்த சில தினங்களாக நாங்கள் பயிற்சிகளில் ஈடுபட்டோம். நேற்றைய தினம் கொஞ்சம் மழை பெய்தததால் பயிற்சிகளில் ஈடுபடவில்லை. எனினும், இங்கிலாந்துடனான போட்டிக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய 6வது லீக்….

கடந்த போட்டிகளில் மாலிங்கவுடன் இணைந்து வெளிப்படுத்திய திறமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

”உண்மையில் இங்கிலாந்தில் விக்கெட்டுகளுக்கு நேராக உள்ள பௌண்டரிகள் மிகவும் சிறியதாகவும், வலது மற்றும் இடது புறங்களில் காணப்படும் பௌண்டரிகள் பெரிதாகவும் இருக்கும். எனவே, நானும் மாலிங்கவும் கடைசி ஓவர்களில் காற்று வீசுகின்ற திசையை நோக்கி பந்துவீசினால் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களை குவிப்பது மிகவும் சவாலாக இருக்கும். எனவே, அந்த விடயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இறுதியாக நடைபெற்ற போட்டியில் பந்துவீசியிருந்தோம்.

ஆனால் காற்று மற்றும் இரு புறங்களிலுமுள்ள பௌண்டரி எல்லையை நோக்கி துடுப்பெடுத்தாட முன் எதிரணி வீரர்கள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து தான் துடுப்பெடுத்தாடுவார்கள். எனவே, அவுஸ்திரேலியாவுடனான லீக் போட்டியில் அந்த வாய்ப்பு எமக்கு கிடைத்தது” என்றார்.

இதேநேரம், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கவுள்ள திட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த போது,

”இந்த மைதானத்தின் இரு புறங்களிலுமுள்ள பௌண்டரி எல்லைகள் முன்னைய போட்டிகளில் நாங்கள் விளையாடிய மைதானங்களில் உள்ள பௌண்டரி எல்லைகளைப் போல அவ்வளவு பெரிது அல்ல. அதேபோல, இந்த மைதானத்திலும் அதேபொன்ற காற்றுவீசக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த காற்றின் சாதகத்தைப் பயன்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சி செய்வோம்”.

இதேவேளை, இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் எனவும், அணியில் உள்ள சக வீரர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பிலும் எழுப்பிய கேள்விக்கு உதான பதிலளிக்கையில்,

”உண்மையில் கடந்த போட்டிகளில் மத்திய வரிசையில் நாங்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. அதேபோல, எந்தவொரு வீரரும் ஓட்டங்களைக் குவிக்காமல் விரைவில் ஆட்டமிழந்து வரும் நோக்கில் மத்திய வரிசையில் களமிறங்க மாட்டார்கள். அன்றைய நாளில் விடுகின்ற தவறுகளால் தான் அவ்வாறு விக்கெட்டுகளை இழப்பதற்கு காரணமாக உள்ளது.   

அதேபோல இப்போது எங்களுக்கு இழப்பதற்கு ஒன்று இல்லை. எனவே, மற்றைய அணிகள் பற்றி சிந்திக்காமல் எம்மால் முடிந்தளவு திறமையினை வழங்கி வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வோம். எனினும், இன்றைய போட்டியை எமக்கான நாளாக மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<