இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது – விராட் கோஹ்லி

930

கடந்த முறை இலங்கை அணியை வைட் வொஷ் செய்துவிட்டோம் என்பதற்காக இலங்கை அணியை குறைத்து மதிப்பிடமாட்டோம் என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டிக்கு முன்னர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விராட் கோஹ்லி கருத்து வெளியிடுகையில்,

”ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது, ஒவ்வொரு தொடரும் பெரிதே. இதில் நாங்கள் எந்தவொரு பாகுபாடும் காட்ட விரும்பவில்லை. இந்தத் தொடரை இழந்தால் பரவாயில்லை என்று நீங்கள் பேசாமல் இருந்து விடுவீர்களா? எனவே நாட்டுக்காக விளையாடும் போது ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக நாங்கள் கடுமையாக முயற்சி செய்வோம்.

என்ன சூழ்நிலையாக இருந்தாலும் எந்த அணிச்சேர்க்கைத் தேவை என்றாலும் அதற்கேற்பவே செயற்படுவோம். வெற்றி பெறுவதுதான் எமது பிரதான இலக்காக உள்ளது. அது இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாட்டு மண்ணில் விளையாடினாலும் சரி. எதிரணியினர் யாராக இருந்தாலும் எங்கள் ஆட்டத்தை சீரான முறையில் விளையாடுவதையே விரும்புகிறோம். ஒரு அணியாக நல்ல கிரிக்கெட் போட்டியை விளையாடுவதற்கு விரும்புகிறோம். மோசமாக விளையாடிவிட்டு அதிலிருந்து சுலபமாக இந்தியாவில் தப்பித்து விட முடியாது. விளையாட்டை மதித்து நம்மிடம் உள்ள திறமைகளை ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மாறி மாறி ஆடினாலும் இதுவரை சமநிலையை சரியாகப் பராமரித்து வருகிறோம். இப்போது டெஸ்ட் போட்டி, முதல் ஆட்டத்தில் உத்வேகம் பெற வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவது அருமையாக உள்ளது. ஏனெனில் இதில் சவால்கள் வித்தியாசமானவை, நாங்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

>> மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் அசேல குணரத்ன <<

இலங்கை அணியுடன் தொடர்ச்சியாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு சலிப்பூட்டுவதாக அமையாதா என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கோஹ்லி பதிலளிக்கையில், ”எனக்கு அது தெரியாது, இந்த ஆய்வை ரசிகர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். ஆட்டத்தை விளையாடுபவர்களை விட ஆட்டத்தைப் பார்ப்பவர்கள் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் விளையாடமாட்டோம், இந்தப் போட்டியில் விளையாடமாட்டோம் என்றெல்லாம் கூறுவதற்கில்லை. எந்தப் போட்டியாக இருந்தாலும் நாங்கள் எங்கள் தீவிரத்தின் உச்சத்தில் இருப்போம். ரசிகர்கள்தான் இந்தக் கேள்விக்கு சரியாக விடை அளிக்க முடியும்” என்று கூறினார்.

ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது குறித்த கேள்விக்கு கோஹ்லி பதிலளிக்கையில், ”பணிச்சுமை பற்றி பேசவேண்டியுள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி நிறைய பேச்சுகள் உள்ளது. விளையாட்டு வீரர்கள் ஏன் ஓய்வு கேட்கிறார்கள் என மக்கள் வெளியில் இருந்து கேட்பது தெரிகிறது. ஒவ்வொரு வீரர்களும் வருடந்தோறும் சுமார் 40 போட்டிகளில் விளையாடுகின்றனர்.

அதில் அனைவரும் 45 ஓவர்கள் துடுப்பெடுத்தாடுவதோ, 30 ஓவர்கள் பந்து வீசுவதோ இல்லை. சிலரே அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வு அளிக்கவேண்டியது அவசியம். குறிப்பாக புஜாராவுக்கு அதிக பணிச்சுமை இருக்கிறது அவர் அனைத்து போட்டிகளிலும் அதிக நேரம் களத்தில் விளையாடுகிறார்.

வீரர்கள் விளையாடுகிற ஒவ்வொரு போட்டியிலும் அனைவருக்கும் ஒரே விதமான பணிச்சுமை இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது 20-25 வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான அணியை கொண்டுள்ளோம், முக்கியமான வீரர்கள் சரியான நேரங்களில் உள்வாங்கப்பட வேண்டும். அந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும்.

>> இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா? <<

மூன்று விதமான போட்டிகளில் விளையாடுபவர்கள் ஒரே விதமான தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. நிச்சயமாக, எனக்கும் ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நான் அதைக் கேட்பேன். நான் ஒன்றும் ரோபா இல்லை, என் சதையை கிழித்து பார்த்தால் எனக்கும் இரத்தம் தான் வரும்” என்று சிரித்தவாறு அவர் பதிலளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி இந்த வருடத்தில் இதுவரை 7 டெஸ்ட், 26 ஒரு நாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், கிரிக்கெட் அரங்கில் அவ்வப்போது பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தார். அத்துடன், கோஹ்லி தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி இதுவரை பங்கேற்ற 8 டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இலங்கையை 3ஆவது முறையாக வீழ்த்தி தொடர்ச்சியாக 9ஆவது டெஸ்ட் தொடரை வெல்லும் வேட்கையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.