மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகின்ற மகளிர் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இலங்கை மகளிர் அணியின் நட்சத்திர முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மைக்காலங்களில் இலங்கை மகளிர் அணிக்காக சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வருகின்ற 26 வயதான இடது கை துடுப்பாட்ட வீராங்கனையான ஹர்ஷிதா சமரவிக்ரம, சமீபத்தில் முடிவடைந்த மகளிர் T20 ஆசிய கிண்ணத்தில் இந்தியாவை தோற்கடித்து இலங்கைக்கு முதல் ஆசியக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்ததுடன், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகி விருதையும் தட்டிச் சென்றார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட T20i தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும், 2ஆவது ஒருநாள் போட்டியில் 65 ஓட்டங்களையும் குவித்தார். இதன்காரணமாக மகளிருக்கான T20i தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்தார்.
- மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!
- மகளிர் T20 உலகக் கிண்ணம் நடைபெறும் புதிய இடம் அறிவிப்பு
- மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றியீட்டியது இலங்கை!
அதுமாத்திரமின்றி, அயர்லாந்து அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய அவர், மகளிருக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதமடித்த 3ஆவது இலங்கை வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
ஹர்ஷிதா சமரவிக்ரம இதுவரை 65 WT20I போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இதில் 31.12 என்ற சராசரியுடன் 1463 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை மகளிர் CPL தொடரில் பார்படோஸ் றோயல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் தவைவி சமரி அத்தபத்து விளையாடவுள்ளார். எனவே, மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள
2ஆவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையை ஹர்ஷிதா பெற்றுக்கொண்டுள்ளளம குறிப்பிடத்தக்கது.
3 அணிகள் பங்குபற்றும் மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை பிரையன் லாரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















