டுபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி ஒன்பதாவது தடவையாக ஆசியக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.
பெதும் நிஸ்ஸங்க கன்னி T20I சதம்; இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றி
ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி கடந்த போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றமளித்தது.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பர்ஹான் 57 ஓட்டங்களையும், பக்ஹர் ஷமான் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, சயும் ஆயும் 14 ஓட்டங்களை பெற்றார். இவர்களையடுத்து களமிறங்கிய எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் இரட்டையிலக்க ஓட்டங்களை அடையவில்லை.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜஸ்ப்ரிட் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இந்திய அணி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதனையடுத்து திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் சஞ்சு சம்சன் சிறந்த இணைப்பாட்டத்தை கொடுக்க இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது.
எனினும் பாகிஸ்தான் அணியும் மத்திய ஓவர்களில் சிறந்த பந்து ஓவர்களை வீசி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும் அரைச்சதம் கடந்த திலக் வர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் இந்திய அணியின் வெற்றியை இலகுவாக்கினர். இறுதியாக 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இந்தியா வெற்றியடைந்தது.
4ஆவது T20 போட்டியிலும் இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு வெற்றி
திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள், சிவம் துபே 33 ஓட்டங்கள் மற்றும் சஞ்சு சம்சன் 24 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எவ்வாறாயினும் இந்த இறுதிப்போட்டியை தொடர்ந்து இந்திய அணி கிண்ணத்தை வாங்குவதற்கு மறுத்திருந்தது. ஆசிய கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரான மொஷின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை வாங்க இந்தியா மறுத்திருந்தது. இதனால் இந்திய அணி கிண்ணமின்றி வெற்றியை கொண்டாடியது.
மறுமுனையில் பாகிஸ்தான் அணி தங்களுக்கான இரண்டாவது இடத்துக்கான சின்னங்களை வாங்கியவாறு உடைமாற்றும் அறைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















