ஐசிசி அறிமுகப்படுத்திள்ள புதிய விதிமுறைகள்!

5817

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது, பந்தின் மீது உமிழ்நீர் இடுவது மற்றும் போட்டிகளில் உள்ளூர் நடுவர்களை நியமிப்பது போன்ற சில தற்காலிக போட்டி ஒழுங்குமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக வீரர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, அனில் கும்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழு முன்வைத்த ஆலோசனைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர், இந்த முடிவுகளை ஐசிசி தலைமை நிர்வாகிகள் குழு அறிவித்திருக்கிறது.

இன்ஸ்டாகிராமிலும் அதிகம் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி

கொவிட்-19 வீரர்கள் மாற்றம்

டெஸ்ட் போட்டியின் போது கொவிட்-19 வைரஸ் அறிகுறி ஏற்படும் வீரர் ஒருவருக்கு பதிலாக மற்றுமொரு வீரரை நடுவர்களால் நியமிக்க முடியும். ஏற்கனவே, வீரர் ஒருவரின் தலையில் பந்து தாக்கினால், அவருக்கு பதிலாக மற்றுமொரு வீரரை உள்வாங்கும் விதிமுறையின் கீழ், இந்த மாற்றமும் இடம்பெறும்.

எவ்வாறாயினும், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது.

பந்தின் மீது உமிழ்நீர் இடுவதற்கு தடை

உமிழ்நீர் மூலமாக பந்தினை பளிச்சிட செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வீரர்கள் பந்தின் மீது உமிழ்நீர் இட்டால், நடுவர்கள் அவர்களுக்கு கருணை அடிப்படையில் எடுத்துரைக்க முடியும். அதேநேரம், அணிக்கு நடுவர்களால் எச்சரிக்கை கொடுக்கப்படும்.

ஒரு இன்னிங்ஸிற்கு 2 எச்சரிக்கைகள் நடுவர்களால் கொடுக்கப்படும்.  மீண்டும் இந்த தவறிழைக்கப்படுமாயின், துடுப்பெடுத்தாடும் அணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்படும். அத்துடன், பந்தின் மீது உமிழ்நீர் இடப்படும் சந்தர்ப்பத்தில், நடுவர்கள் பந்தினை சுத்தமாக்க வேண்டும் என அறிவுறுத்துவர்.

நடுநிலை நாடுகள் இல்லாத நடுவர்கள்

சர்வதேச போட்டிகளில் நடுநிலை நாடுகளை சேர்ந்த நடுவர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை ஐசிசி தற்காலிகமாக நீக்கியுள்ளது. கொவிட்-19 காரணமாக சர்வதேச பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்காரணமாக உள்ளூரில் உள்ள எமிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் பெனல் போட்டி அதிகாரிகள், எமிரேட்ஸ் ஐ.சி.சி சர்வதேச குழு போட்டி அதிகாரிகளை ஐசிசியால் நியமிக்க முடியும்.

மேலதிக DRS

புதிய விதிமுறையின் படி, ஒரு இன்னிங்ஸிற்கு மேலதிகமாக ஒரு DRSஐ வழங்க ஐசிசி முடிவுசெய்துள்ளது. இந்த DRS ஆனது போட்டியின் போது குறைந்த அனுபவம் கொண்ட நடுவர்கள் இருந்தால் மாத்திரமே வழங்கப்படும். அதன்படி, டெஸ்ட் போட்டிகளுக்கு 3 DRSகளும், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கு 2 DRSகளும் வழங்கப்படும்.

இதேவேளை, போட்டியின் விதிமுறைகளை மீறுவோருக்கான விசாரணைகளுக்கு ஐ.சி.சி கிரிக்கெட் செயற்பாட்டு குழு உதவவுள்ளது. அதுமாத்திரமின்றி, நடுநிலை எலைட் பெனல் போட்டி மத்தியஸ்தர் ஒருவர் வீடியோ அழைப்பு மூலமாக விசாரணைகளை மேற்கொள்வார்.

மேலதிக லோகோவுக்கான (Logo) அனுமதி

வீரர்களின் உடைகளில் அச்சிடப்படும் லோகோக்களுக்கான கடந்தகால விதிமுறைகள் எதிர்வரும் 12 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் போட்டிகளில் அச்சிடப்படும் மூன்று லோகோக்களை தவிர்த்து, 32 சதுர அங்குலத்துக்கு அதிகமாகாத லோகோ ஒன்றினை வீரர்களின் ஜேர்சி மற்றும் கம்பளிச்சட்டைகளின் மார்புப்பகுதியில் அச்சிட முடியும். தற்போதுள்ள சட்டத்தின் படி, ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மாத்திரமே மார்புப்பகுதியில் லோகோக்கள் அச்சிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<