கொழும்பு திரில் வெற்றி; நியு யங்ஸை வீழ்த்திய ரினௌன்

Super League 2021

232

சுபர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது வாரத்திற்கான போட்டிகளில் கொழும்பு கால்பந்து கழகம் 3-2 என அப்கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகத்தை திரில் முறையில் வெற்றி கொண்டது. அடுத்த போட்டியில் நியு யங்ஸ் கால்பந்து கழகத்தை 2-1 என ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டது.

அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க எதிர் கொழும்பு கா.க

புதன்கிழமை (29) மாலை சுகததாச அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் அப்கண்ட்ரி லயன்ஸ் அணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது அந்த அணியின் தலைவர் மரியதாஸ் நிதர்சன் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

எனினும், அடுத்த 10 நிமிடங்களில் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தைப் பெற்ற மொஹமட் ஆகிப் எதிரணியின் கோல் திசையில் ஒரு பக்கத்தில் இருந்த பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.

மீண்டும் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் நிதர்சன் அப்கண்ட்ரி லயன்ஸ் அணிக்கான இரண்டாவது கோலையும் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், போட்டியின் உபாதையீடு நேரத்தில் கொழும்பு கால்பந்து கழகம் காண்பித்த அபார ஆட்டம் காரணமாக போட்டியின் முடிவு முழுமையாக மாறியது.

96ஆவது நிமிடத்தில் ஷலன சமீர உள்ளனுப்பிய பந்தை திமித்ரி ஹெடர் செய்து கோலாக்கினார். மீண்டும் இரண்டு நிமிடங்களில் எதிரணியின் கோல் எல்லையில் மிக வேகமாக செயற்பட்ட கொழும்பு அணிக்கு ஆகிப் வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, 3-2 என வெற்றி பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் 16 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

முழு நேரம்: அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க 2 – 3 கொழும்பு கா.க

கோல் பெற்றவர்கள்

  • அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க – மரியதாஸ் நிதர்சன் 21’ & 63’
  • கொழும்பு கா.க – மொஹமட் ஆகிப் 31’ & 90+8’, பொட்ரிக் திமித்ரி 90+6’

நியு யங்ஸ் கா.க எதிர் ரினௌன் வி.க

இதே மைதானத்தில் இரண்டாவது ஆட்டமாக இடம்பெற்ற போட்டியின் முதல் பாதியில் ரினௌன் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஜொப் மைக்கல் வெளியே அடித்து வீணாக்கினார். எனவே, முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது.

ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து ஜூட் சுபன் உதைந்த பந்தை எதிரணி வீரர் தடுத்தார். மீண்டும் அந்த பந்தை சுபன் வேகமாக கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் போட்டார்.

அடுத்த 3 நிமிடங்களில் ரினௌன் வீரர்கள் மேற்கொண்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கோல் எல்லைக்கு வந்த பந்தை டிலான் மதுசங்க கோலாக்கினார்.

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் நியு யங்ஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த முஷிகான் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

அதன் பின்னர் எந்த கோலும் பெறப்படாத நிலையில் போட்டியின் நிறைவில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

முழு நேரம்: நியு யங்ஸ் கா.க 1 – 2 ரினௌன் வி.க

கோல் பெற்றவர்கள்

  • நியு யங்ஸ் கா.க – M. முஷிகான் 78′
  • ரினௌன் வி.க – ஜூட் சுபன் 53′, டிலான் மதுசங்க 56′

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<