இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் நடைபெறும் மாகாண ரீதியிலான “சுபர் 4″ (நான்கு நாட்கள் கொண்ட) முதல்தர கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதி வாரத்திற்குமான போட்டிகள் இரண்டும் இன்று (21) ஆரம்பமாகியது.
காலி எதிர் கண்டி
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பமாகியிருந்து. ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்ற காலி அணியின் தலைவர் தசுன் சானக்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
இதற்கமைவாக முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த காலி அணிக்கு, அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான லஹிரு மிலந்த அட்டகாசமான அரைச்சதம் ஒன்றுடன் பெறுமதி சேர்த்திருந்தார். பின்னர், மிலந்தவின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் 66 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?
தொடர்ந்து துடுப்பாட்ட வந்த சதீர சமரவிக்ரம 40 ஓட்டங்களுடன் குறிப்பிடும்படியான ஓர் ஆட்டத்தை காலி அணிக்காக வெளிக்காட்டியிருந்தார். சமரவிக்ரமவின் விக்கெட்டினை அடுத்து மத்திய வரிசையில் ஆடுவதற்காக அணித்தலைவர் தசுன் சானக்க, ரோஷென் சில்வா ஆகியோர் கைகோர்த்தனர். மிகவும் பொறுமையாகவும் சாதுர்யமாகவும் ஆடிய இவர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட அரைச்சதங்களினால் காலி அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 167 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காலி அணியின் ஐந்தாம் விக்கெட்டாக வீழ்ந்த தசுன் சானக்க 12 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 90 ஓட்டங்களுடன் சதம் கடக்க தவறியிருந்தார்.
தனது இணைப்பாட்ட ஜோடியான சானக்க சதம் கடக்கத் தவறியிருந்தாலும், மறுமுனையில் ரொஷேன் சில்வா முதல்தரப் போட்டிகளில் தனது 22 ஆவது சதத்தைக் குறித்துக் கொண்டார். அத்தோடு இத்தொடரில் இது சில்வாவுக்கு இரண்டாவது சதமாகவும் அமைந்திருந்தது. ரொஷேன் சில்வாவின் சதத்தின் உதவியுடன் முதல் நாள் நிறைவில் காலி அணி 90 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது. களத்தில், ரோஷென் சில்வா 100 ஓட்டங்களுடனும், தம்மிக்க பிரசாத் 3 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில் இன்றை நாளுக்காக லஹிரு சமரக்கோன், பிரபாத் ஜயசூரிய, சரித் அசலன்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஸ்கோர் விபரம்
தம்புள்ளை எதிர் கொழும்பு
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.
இதன்படி முதல் இன்னிங்சினை ஆரம்பித்த கொழும்பு அணிக்கு, தொடக்க வீரர்களாக வந்திருந்த ஷெஹான் ஜயசூரிய மற்றும் கெளசால் சில்வா ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தனர்.
தொடர்ந்து வந்த தேசிய அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா, லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால் ஆகியோரும் கொழும்பு அணிக்காக சோபிக்கத் தவறியிருந்தனர்.
எனினும், மத்திய வரிசையில் ஆட களம் நுழைந்திருந்த வனிது ஹஸரங்க, லசித் அபேரத்ன ஆகியோர் அரைச்சதங்கள் கடந்து அணிக்கு வலுச்சேர்த்தனர்.
இங்கிலாந்து அறிமுகப்படுத்தவுள்ள புதுவகை கிரிக்கெட்
இதில் லசித் அபேரத்ன 9 பெளண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களினையும், வனிது ஹஸரங்க 52 ஓட்டங்களினையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களை அடுத்து பின்வரிசையில் வந்த வீரர்கள் ஜொலிக்காத காரணத்தினால் கொழும்பு அணி முதல் இன்னிங்சில் 210 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
தம்புள்ளை அணி சார்பாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட லஹிரு மதுஷங்க 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாந்து 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்திருந்த தம்புள்ளை அணி 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து ஆரோக்கியமான நிலை ஒன்றில் காணப்பட்டிருந்த போது முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
முதல் நாள் ஸ்கோர் விபரம்
இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.











