மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண நடுவர்கள் குழாத்தில் இரு இலங்கையர்கள்

ICC Women’s Cricket World Cup 2025

190
ICC Women’s Cricket World Cup 2025

இலங்கை மற்றும் இந்தியாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகாவுள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பணியாற்றவுள்ள அனைத்து நடுவர்களையும் பெண்களாக நியமிக்க ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் இம்முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக பெண்களைக் கொண்ட நடுவர் குழாத்தை ஐசிசி அறிவித்துள்ளது

இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது: நடுவர்கள் குழுவில் அனைவரையும் பெண்களாக பணியமர்த்தியது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் என்பதின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக பார்க்கிறோம். இந்த வளர்ச்சி அடையாள மதிப்பைத் தாண்டியது. கண்ணால் காணத்தக்க, எதிர்காலத்தில் பலரையும் உத்வேகம் கொள்ளதக்க வாய்ப்பாக அமையும்” என்றார்.

இந்த நிலையில், இந்த நடுவர்கள் குழாத்தில் இலங்கையைச் சேர்ந்த மிச்செல் பெரேரா போட்டி மத்தியஸ்தராகவும், நிமாலி பெரேரா கள நடுவராகவும் பணியாற்றவுள்ளனர். இருவரும் கோல்ட்ஸ் பெண்கள் அணிக்காக விளையாடியுள்ளனர். இதில் மிச்செல் பெரேரா இடது கை துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் செயல்பட்டுள்ளதுடன், நிமாலி பெரேரா வலது கை மித வேகபந்து வீச்சாளராகவும், வலது கை துடுப்பாட்ட வீரராகவும் இருந்துள்ளனர். மிச்செல் பெரேரா 2005 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடியதுடன், நிமாலி பெரேரா இலங்கை A அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகள் (WODIs) மற்றும் மகளிர் T20I சர்வதேச போட்டிகளில் (WT20Is) நடுவர்களாக பணிபுரிந்த அனுபவமும் உடையவர்கள்.

இதனிடையே, ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ள 14 பேர் கொண்ட கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலொசாக், ஜெக்குலின் வில்லியம்ஸ் மற்றும் சூ ரெட்பெர்ன் உள்ளிட்ட அனுபவமிக்க சிறந்த பெண் கள நடுவர்களும் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர்.

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களுக்கான பரிசுத் தொகையையும் ஆடவர் அணிக்கு நிகராக சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எட்டு அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நவம்பர் 02ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 33 நாட்களாக நடைபெறும் இந்த மெகா தொடரில், 31 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணி விளையாடவுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டி மத்தியஸ்தர்கள் விபரம்: ட்ரூடி ஆண்டர்சன், ஷாண்ட்ரே ஃப்ரிட்ஸ், ஜி.எஸ். லக்ஷ்மி, மிச்செல் பெரேரா

கள நடுவர்கள் விபரம்: லாரன் ஏகென்பாக், கேண்டஸ் லா போர்டே, கிம் காட்டன், சாரா தம்பனேவானா, ஷாதிரா ஜாகிர் ஜெஸி, கெரின் க்லாஸ்டே, ஜனனி நாராயணன், நிமாலி பெரேரா, க்லேர் போலசாக், வ்ரிந்தா ரத்தி, சூ ரெட்ஃபேர்ன், எலோயிஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியம்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<