அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 2-0 என இழந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அயர்லாந்து அணிக்கு வழங்கியது.
பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஹெமி ஹண்டர் லியா போல் அகியோரின் சிறந்த துடுப்பாட்ட பங்களிப்புகளின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் லியா போல் 81 ஓட்டங்களையும், ஹெமி ஹண்டர் 66 ஓட்டங்களையும் பெற்றுத்தந்தனர்.
இவர்கள் இருவரையும் அடுத்து ரெபேகா ஸ்டொகெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் அச்சினி குலசூரிய மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அயர்லாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் முதல் 2 விக்கெட்டுகள் 46 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. விஷ்மி குணரத்ன மற்றும் சமரி அதபத்து ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியிருந்த போதும், ஹர்சிதா சமரவிக்ரம அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் சிறப்பாக ஆடி ஒரு பக்கம் ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் கவீஷா டில்ஹாரியும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடியதுடன், 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இதில் 53 ஓட்டங்களை பெற்றிருந்த கவீஷா டில்ஹாரி ஆட்டமிழந்தார்.
இந்த இணைப்பாட்டத்துடன் இலங்கை அணி சிறந்த நிலையில் இருந்த போதும் அடுத்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவினி ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார். எனினும் அற்புதமாக ஆடிய ஹர்சிதா சமரவிக்ரம தன்னுடைய கன்னி சதத்தை பதிவுசெய்தார். இவர் 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்துவந்த வீராங்கனைகள் தொடர்ச்சியாக விக்கட்டுகளை பறிகொடுத்தனர்.
வெற்றியினை நெருங்கி வரும் இங்கிலாந்து லயன்ஸ் அணி
இதில் நிலக்ஷி டி சில்வா மாத்திரம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற, இலங்கை மகளிர் அணி 48 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அயர்லாந்து அணிக்காக அர்லென் கெலி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்ற அயர்லாந்து மகளிர் அணி 2-0 என தொடரை வெற்றிக்கொண்டது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















