சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளுக்கான ஆட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக குறைவான ஓவர்களே வீசப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை (14) சென். லூசியாவில் ஆரம்பமாகியிருந்த தீர்மானமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி முதல் இன்னிங்சுக்காக 253 ஓட்டங்களை மாத்திரமே குவித்துக் கொண்டது. இலங்கை அணியின் இன்னிங்சை அடுத்து ஆட்டத்தின் முதல் நாளிலேயே தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் நிறைவில் 2 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தது. களத்தில் கிரைக் பரத்வைட் 2 ஓட்டங்களுடனும், டெவோன் ஸ்மித் ஒரு ஓட்டத்துடனும் நின்றிருந்தனர்.
வேகப்பந்துவீச்சாளர்களினால் முதல் நாளை தமதாக்கிய மேற்கிந்திய தீவுகள்
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது…
நேற்று (15) தொடர்ந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியை விட 251 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி மெதுவான முறையில் ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்தது. இலங்கை அணிக்கு இந்த இன்னிங்சில் வீசப்பட்ட 13 ஆவது ஓவரின் போது இளம் வேகப்புயல் லஹிரு குமாரவினால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கிரைக் பரத்வைட்ட்டை LBW முறையில் வீழ்த்த ஒரு வாய்ப்பு உருவாகியிருந்த போதிலும், மூன்றாம் நடுவரின் தலையீட்டினால் அது ஆட்டமிழப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
பின்னர், இலங்கை அணிக்கு தேவையாக இருந்த முதல் விக்கெட்டை இப்போட்டியின் மூலம் அறிமுகமாகியிருந்த கசுன் ராஜித கைப்பற்றியிருந்தார். கசுன் ராஜிதவினால் ஏற்கனவே, லஹிரு குமாரவிடம் இருந்து தப்பித்த கிரைக் பரத்வைட் இம்முறை நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து 22 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். பரத்வைட் ஆரம்ப விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக டெவோன் ஸ்மித்துடன் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விக்கெட்டினை அடுத்து சிறிது நேரத்தில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளையும் வந்தது. மதிய போசனத்தின் போது மேற்கிந்திய தீவுகள் அணி 65 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் டெவோன் ஸ்மித்தும் (29) புதிய துடுப்பாட்ட வீரர் கெய்ரன் பவலும் (03) அணிக்கு வலுவளித்துக் கொண்டு இருந்தனர்.
மதிய போசன இடைவேளையை அடுத்து ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால், வெறும் 11.1 ஓவர்கள் மட்டுமே தேநீர் இடைவேளை வரை வீசப்பட்டிருந்தது. இந்த தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டெவோன் ஸ்மித் தன்னுடைய 7 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இதேவேளை, இலங்கை அணிக்கு லஹிரு குமாரவின் பந்துவீச்சினால் கெய்ரன் பவலின் விக்கெட்டினை பிடியெடுப்பு மூலம் எடுக்கும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகியிருந்தது. எனினும், மூன்றாம் நடுவர் அது ஆட்டமிழப்பு இல்லை எனக் கூறியிருந்தார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமன்த தேவப்பிரிய உடன்…
தேநீர் இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் லஹிரு குமாரவினால் குசல் மெண்டிஸின் பிடியெடுப்போடு கெய்ரன் பவலின் விக்கெட் கைப்பற்றப்பட்டிருந்தது. கெய்ரன் பவல் ஆட்டமிழக்கும் போது 27 ஓட்டங்களை (இரண்டு பெளண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பவலின் விக்கெட்டை அடுத்து, போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டத்தில் இடையூறு ஏற்பட்டிருந்தது. இதனால், போட்டியின் நடுவர்கள் இரண்டாம் நாளுக்கான ஆட்டம் முடிந்ததாக அறிவித்தனர்.
இரண்டாம் நாள் முடிவின் போது மேற்கிந்திய தீவுகள் அணி 44.3 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், இலங்கை அணியை விட 135 ஓட்டங்களாலும் முதல் இன்னிங்சில் பின்தங்கி காணப்படுகின்றது. களத்தில் அரைச்சதம் தாண்டிய டெவோன் ஸ்மித் 53 ஓட்டங்களுடனும், துடுப்பாட்ட வீரரான ஷாய் ஹோப் 2 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.
இலங்கையின் பந்துவீச்சாளர்கள் இரண்டாம் நாளுக்கான பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட போதிலும் வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கே விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியுமாக இருந்தது.
ஸ்கோர் விபரம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க



















