55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

720

இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-0 என வைட்வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 327 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குசால் மெண்டிஸ், ரொஷேன் சில்வா மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோரின் போராட்டத்துக்குப் பின்னர், 284 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் தடுமாறும் இலங்கை

நேற்றைய ஆட்டநேர முடிவில் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 82 ஓட்டங்களுக்கு 5வது விக்கெட்டை இழந்தது. லக்ஷான் சந்தகன் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரொஷேன் சில்வா மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி உணவு இடைவேளை வரை சிறந்த ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது. குசால் மெண்டிஸ் அரைச்சதம் கடக்க உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

உணவு இடைவேளையின் பின்னரும், இந்த ஜோடி சிறந்த துடுப்பாட்டத்தை மேற்கொள்ள, சதத்தை நெருங்கிய குசால் மெண்டிஸ், ஜெக் லீச்சின் அற்புத களத்தடுப்பின் மூலமாக 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரொஷேன் சில்வா மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்காக 102 ஓட்டங்களை பகிர்ந்தது. இதேநேரம், அடுத்துவந்த நிரோஷன் டிக்வெல்ல (19) மற்றும் டில்ருவான் பெரேரா (5) ஆகியோர் வேகமாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதேநேரம், அரைச்சதம் கடந்து தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வந்த ரொஷேன் சில்வாவும் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் நம்பிக்கை பறிபோனது. எனினும், இறுதி விக்கெட்டுக்காக இணைந்த சுரங்க லக்மால் மற்றும் மலிந்த புஷ்பகுமார ஜோடி நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. தேநீர் இடைவேளை வரை 58 ஓட்டங்களை பகிர்ந்த போதும், தேநீர் இடைவேளைக்கு பின்னர் நான்கு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட நிலையில் சுரங்க லக்மால் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய மலிந்த புஷ்பகுமார 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இங்கிலாந்து அணிசார்பில் ஜெக் லீச் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியை முழுமையாக நோக்கும் போது, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஜொனி பெயார்ஸ்டோவின் சதத்தின் உதவியுடன் 336 ஓட்டங்களை குவித்தது.

உபாதையிலிருந்து மீண்டு, அணிக்கு திரும்பிய ஜொனி பெயார்ஸ்டோவ் 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணிக்கு நம்பிக்கை கொடுத்ததுடன், இவருடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களையும், ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லக்ஷான் சந்தகன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், டில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுகளையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை முதல் விக்கெட்டை குறைந்த ஓட்டங்களுக்கு இழந்த போதும், மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றிருந்தது.  திமுத் கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களை பகிர்ந்தது.

இதில், திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற பலமான நிலையில் இருந்தது. எனினும் அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க, இலங்கை அணி 240 ஓட்டங்களுக்கு சுருண்டது. குறிப்பாக, இறுதி 57 ஓட்டங்களுக்கு இலங்கை அணி தங்களுடைய 8 விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, அபாரமாக பந்துவீசிய ஆதில் ரஷீட் 5 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 99 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். ரோரி பேர்ன்ஸ், கீடொன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர்.

Photos : Sri Lanka vs England – 3rd Test | Day 4

இவர்களின் 89 ஓட்ட இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு அதிக சவாலை முன்வைத்தது. எனினும், குறித்த இணைப்பாட்டத்தை இரண்டு தடவைகள் லக்ஷான் சந்தகன் தகர்த்திருந்த போதும், துரதிஷ்டவசமாகநோ போல்” பந்துகள் மூலமாக இலங்கை அணியின் வாய்ப்புகள் பறிபோயின. பென் ஸ்டோக்ஸ் 22 மற்றும் 32 ஓட்டங்களை பெற்றிருந்த போது, சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போதும், குறித்த பந்துகள் நோ போல் பந்துகள் என நடுவர்களால் அறிவிக்கப்பட்மை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தின.

குறித்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 64 ஓட்டங்களையும் பெற, இறுதியாக வந்த பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இங்கிலாந்து அணி 230 ஓட்டங்களை பெற்று, இலங்கை அணிக்கு 327 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்த நிலையில், இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 42 ஓட்டங்களால் தோல்விடைந்தது.

இங்கிலாந்து அணியின் இந்த வைட்வொஷ் முறையிலான வெற்றியானது சுமார் 55 வருட வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது. இங்கிலாந்து அணி தங்களுடைய சொந்த நாட்டுக்கு வெளியே 55 வருடங்களுக்கு பின்னர் பெற்றுள்ள வைட்வொஷ் வெற்றியாக இந்த தொடர் வெற்றி பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 1963ம் ஆண்டு நியூஸிலாந்தில் வைத்து, அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. அத்துடன் இந்த வைட்வொஷ் வெற்றியானது இலங்கையில் வைத்து இங்கிலாந்து அணி பெற்ற முதல் வைட்வொஷ் வெற்றியாகவும் பதிவாகியுள்ளது.

போட்டி சுருக்கம்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க