சாதனையுடன் T-20 போட்டிகளின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

1808
Image Courtesy - Associated Press

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நிறைவடைந்திருக்கும், T-20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இலங்கை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

[rev_slider LOLC]

டாக்காவில் இன்று (15) ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்மதுல்லா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டிக்காக பங்களாதேஷ் அணி நான்கு அறிமுக வீரர்களை களமிறக்கியிருந்ததோடு (சாகிர் ஹசன், அபிப் ஹொசைன், அரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம்) மறுமுனையில் இலங்கை அணியும் ஷெஹான் மதுஷங்கவுக்கு T-20 போட்டியொன்றில் முதல் தடவையாக விளையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தோடு நான்கு வருடங்களின் பின்னர் T-20 போட்டிகளுக்காக சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிசும் இலங்கை அணிக்கு திரும்பியிருந்தார்.

104 உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தங்கள் கையளிப்பு

போட்டியின் முதல் துடுப்பாட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு செளம்யா சர்க்கர் அசத்தல் ஆரம்பம் ஒன்றை வழங்கினார். 49 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனுஷ்க குணத்திலக்கவின் ஓவரில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்த பங்களாதேஷ் அணிக்கு, செளம்யா சர்க்கர் அவரது கன்னி T-20 அரைச் சதம் மூலம் வலுவளித்தார். இதனால், 100 ஓட்டங்களை அவ்வணி போட்டியின் 11 ஆவது ஓவரிலேயே எட்டியிருந்தது.

பின்னர், செளம்யா சர்க்கரை ஜீவன் மெண்டிஸ் LBW முறையில் ஓய்வறை அனுப்பி இலங்கை அணிக்கு இருந்த அச்சுறுத்தல் ஒன்றை இல்லாமல் செய்திருந்தார். சர்க்கர் ஆட்டமிழக்கும் போது 32 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து, மைதான சொந்தக்காரர்களுக்கு அணித் தலைவர் மஹ்மதுல்லா, விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர் துரிதகதியிலான துடுப்பாட்டத்தின் மூலம் பங்களிப்பு வழங்க 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை மஹ்மதுல்லா 43 ஓட்டங்களுடன் அணிக்கு பெறுமதி தந்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக ஜீவன் மெண்டிஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தனுஷ்க குணத்திலக்க, இசுரு உதான, திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, 194 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவரான தனுஷ்க குணத்திலக்கவின் அதிவிரைவான பவுண்டரிகள் பெரிய இலக்கு ஒன்றை தொடுவதற்கான நல்ல அடித்தளம் ஒன்றை அமைத்து தந்தது. எனினும், துரதிஷ்டவசமாக தனுஷ்க குணத்திலக்கவின் இன்னிங்ஸ் 30 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டிருந்தது.

இறுதி நேரத்தில் இலங்கை T-20 அணியில் இருந்து விலகிய அசேல குணரத்ன

குணத்திலக்கவின் பங்களிப்பைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் விஸ்ரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தார். அதிரடியாக ஆடி வெறும் 25 பந்துகளில் கன்னி T-20 அரைச் சதத்தினை பூர்த்தி செய்த குசல் மெண்டிசினால் இலங்கை அணி விரைவாக இலக்கை நோக்கி முன்னேறியிருந்தது. எனினும், மெண்டிசின் அதிரடி பங்களாதேஷ் அறிமுக வீரர் அபிப் ஹொசைனின் சுழலில் முடிந்தது. குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மெண்டிசின் விக்கெட்டை அடுத்து குறுகிய நேர இடைவெளிக்குள் நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஆகியோரின் விக்கெட்டுக்களை இலங்கை அணி பறிகொடுத்திருந்தது. இதனால், ஒரு தடுமாற்றம் உணரப்பட்ட போதிலும் மத்தியவரிசை வீரர்களாக வந்த தசுன் சானக்க, திசர பெரேரா அழுத்தங்கள் எதனையும் உணராதவர்கள் போன்று பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்திருந்தனர்.  

இதனால், சவால் கூடிய வெற்றி இலக்கை 16.4 ஓவர்களில் 194 ஓட்டங்களுடன் வெறும் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலங்கை அடைந்தது.

இலங்கை அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற தசுன் சானக்க 24 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களையும், திசர பெரேரா 18 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான நஸ்முல் இஸ்லாம் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இந்த வெற்றியின மூலம் இலங்கை அணி, இறுதியாக தாம் விளையாடிய எட்டு டி20 போட்டிகளிலும் பெற்ற தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றது. இத்தோடு, இப்போட்டியில் எட்டப்பட்ட 194 ஓட்டங்கள் இலங்கை அணி T-20 போட்டியொன்றில் தாண்டிய அதிகூடிய வெற்றி இலக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை குசல் மெண்டிஸ் பெற்றுக் கொண்டார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான T-20 போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) சில்லெட்டில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

முடிவு – இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

போட்டியின் நேரடி வர்ணனை எழுத்து வடிவில்