த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

1229

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது குழு நிலைப் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை ஒரு விக்கெட்டினால் தோற்கடித்து த்ரில் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியுடன் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளில் ஒன்றாகவும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மாறியுள்ளது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் குழு A அணிகளில் ஒன்றாக காணப்படுகின்ற இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி தமது முதல் போட்டியில் ஓமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை  109 ஓட்டங்களால் தோற்கடித்த நிலையில் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை இன்று (8) நடைபெற்ற போட்டியில் எதிர்கொண்டிருந்தது.

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவர் நஜிபுல்லாஹ் சத்ரான் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

உபாதைக்கு ஆளாகிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் சரித் அசலங்கவிற்கு பதிலாக இப்போட்டியை சம்மு அஷான் வழிநடாத்த தேசிய கிரிக்கெட் அணி வீரரான ஷெஹான் ஜயசூரியவும் அணியில் இணைந்திருந்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 210 ஓட்டங்களை குவித்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பு துடுப்பாட்டத்தில் கரீம் ஜனாத் அரைச்சதம் ஒன்றுடன் 99 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, சஹிதுல்லாஹ் கமால் 38 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார்.

இதேநேரம் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக லசித் அம்புல்தெனிய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்கான 211 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி சீரான ஆரம்பத்தினை காட்டிய போதிலும் ஒரு கட்டத்தில் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலைக்குச் சென்றது.

இப்படியான ஒரு நிலையில் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் சம்மு அஷான் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் வலுவான இணைப்பாட்டம் (74) ஒன்றினை வழங்கி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி வெற்றிப்பாதையில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து சம்மு அஷான் 34 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினைப் பறிகொடுக்க இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேற இறுதி நம்பிக்கையாக இருந்த கமிந்து மெண்டிஸும் அரைச் சதம் ஒன்றை தாண்டிய நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் 197 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி செல்ல ஆட்டம் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பக்கம் மாறியது.

இத்தருணத்தில் போட்டியின் வெற்றிக்கு இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட இந்த வெற்றி ஓட்டங்களை லசித் அம்புல்தெனிய மற்றும் அசித பெர்னாந்து ஜோடி போராடி பெற்றுத்தந்தது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து அசலங்க, வன்டர்சேய் வெளியேற்றம்

இதன்படி போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 49.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் 211 ஓட்டங்களுடன் த்ரில் வெற்றி ஒன்றினை பதிவு செய்தது.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் ஏற்கனவே பந்துவீச்சிலும் அசத்திய கமிந்து மெண்டிஸ் அபாரமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 98 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக இலங்கை வீரர்களுக்கு அச்சுறுத்தல் தந்த ஷியா-உர்-ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும், கரீம் ஜனாட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, அடுத்ததாக திங்கட்கிழமை (10) தமது இறுதி குழுநிலைப் போட்டியில் இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியுடன் மோதுகின்றது.

இதேவேளை இப்போட்டியில் தோல்வியினை தழுவியிருக்கும் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கான வாய்ப்பினை இழந்திருக்கின்றது.

ஸ்கோர் விபரம்

 

முடிவு – இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<