சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இளையோருக்கு த்ரில் வெற்றி

ACC men’s U19 Asia Cup 2025

47
Chamika Heenatigala

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (15) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 7ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றியை பதிவு செய்த இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

மாத்தறை புனித செர்விசியஸ் கல்லூரியின் விரான் சமுதித்த குவித்த அரைச் சதம் மற்றும் கொழும்பு மஹாநாம கல்லூரியின் சகலதுறை வீரர் சாமிக்க ஹீனட்டிகலவின் சகலதுறை ஆட்டம் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

துபாயிலுள்ள ஐசிசி அகடமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 49.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் அணி 235 ஓட்டங்ளுக்கு சுருண்டது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஒஸ்மான் சதாத் 52 ஓட்டங்களையும், பைசால் ஷினோஸதா 39 ஓட்டங்களையும், அஸிஸுல்லா மியாக்கில் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துல்னித் சிகேரா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், செத்மிக்க செனவிரத்ன 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரசித் நிம்சர 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. மத்திய வரிசையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் சாமிக்க ஹீனட்டிகல (51 ஓட்டங்கள்) பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

இதன்படி, 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்கள் எடுத்த இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விரான் வித்தானபத்திரன 62 ஓட்டங்களையும், சாமிக்க ஹீனட்டிகல ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெடடுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி குழு B புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறையிலும் பிரகாசித்த சாமிக்க ஹீனட்டிகல தெரிவானார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, தமது 3ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை நாளை (17) எதிர்கொள்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<