தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்திருந்த 348 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடியின் இணைப்பாட்டத்துடன் போராட்டம் காண்பித்து வருகின்றது.
மூன்றாவது நாள் நிறைவில் தென்னாபிரிக்கா அணி 191 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. தெம்பா பௌவுமா மற்றும் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
அதன்படி இன்றைய தினம் களமிறங்கி இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், பௌவுமா அரைச்சதத்தை கடந்தார். இருவரும் இலங்கை அணிக்கு சவால் கொடுத்த நிலையில் ஸ்டப்ஸ் 47 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தென்னாபிரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர். குறிப்பாக இன்றைய தினம் மேலதிகமாக 126 ஓட்டங்களை மாத்திரமே தென்னாபிரிக்க அணி பெற்றுக்கொண்டதுடன், சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. பிரபாத் ஜயசூரிய வெளிநாட்டு மண்ணில் முதன்முறையாக 5 விக்கெட் குவிப்பை கைப்பற்ற, தென்னாபிரிக்கா அணி 317 ஓட்டங்களை மொத்தமாக பெற்று, 348 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. தென்னாபிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக தெம்பா பௌவுமா 66 ஓட்டங்களை பெற்றார்.
தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் கொடுத்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து 18 ஓட்டங்களை பெற்றிருந்த பெதும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் இழப்பின் பின்னர் தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்காக அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினர். இருவரும் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில் மெதிவ்ஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து நேர்த்தியாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர்கள் இருவருடைய விக்கெட்டுகளையும் கேஷவ் மஹாராஜ் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். எனினும் இறுதியாக களமிறங்கிய தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நான்காவது நாள் ஆட்டநேர நிறைவுவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை 205/5 ஆக அதிகரித்துள்ளனர். இருவரும் 83 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், தலா 39 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளனர். பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் மற்றும் டேன் பெட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 200 ஓட்டங்களை கடந்துள்ளதுடன், கடைசி நாளான நாளை (09) வெற்றிபெற வேண்டுமானால் 143 ஓட்டங்களை பெறவேண்டும். இலங்கை அணியிடம் 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும், கடைசி இரண்டு துடுப்பாட்ட வீரர்களாக மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் மாத்திரமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.