சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஆதிக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
லண்டன் ஓவல் அரங்கில் நேற்று (07) தொடக்கம் ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் இங்கிலாந்தை இலங்கை அணியானது துடுப்பாடப் பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட் ஒன்றினைப் பறிகொடுத்த போதும் தொடக்க துடுப்பாட்ட வீரர்களான பென் டக்கட் சிறந்த ஆரம்பம் ஒன்றை வழங்கினார். அவர் அரைச்சதம் கடந்த நிலையில் போட்டியில் முதலவதாக மழையின் குறுக்கீடு ஏற்பட்டது.
அதனை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் நம்பிக்கை வழங்கினார். ஒல்லி போப் சதம் விளாசிய நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக 44.1 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில், முதல் நாள் ஆட்டமானது கைவிடப்பட்டது.
அதன்படி இங்கிலாந்து அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் 221 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. இங்கிலாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது இருக்கும் ஒல்லி போப் 103 ஓட்டங்களுடன் காணப்பட, பென் டக்கட் 86 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மிலான் ரத்நாயக்க ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.