பங்களாதேஷ் இளையோர் அணியுடனான இலகு வெற்றியுடன் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை

938
Emerging Asia Cup 2017
Asian Cricket Council FB

இன்று நடைபெற்று முடிந்திருக்கும் இளையோர் ஆசியக்கிண்ண சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் ஒன்றில், சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை இளையோர் அணி பங்களாதேஷ் இளையோர் அணியினை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலகு வெற்றியினை சுவீகரித்துக் கொண்டதுடன் தொடரின் இறுதிப்போட்டிக்கும் தெரிவாகியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்றிருந்த இத்தொடரின் குழு நிலை ஆட்டங்களிற்கு அமைவாக பெற்றிருந்த புள்ளிகள் அடிப்படையில் குழு A இல் முதலிடத்தினைப் பெற்றிருந்த இலங்கை இளையோர் அணியும் குழு B இல் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் சம்பியன் கனவுகளுடன் மோதியிருந்த இந்த அரையிறுதிப்போட்டி முன்னதாக சிட்டகொங் நகரின் ஸாஹூர் அஹ்மத் செளத்ரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியினைப் பற்றிக்கொண்ட பங்களாதேஷ் இளையோர் அணியின் தலைவரான மொமினுல் ஹக் சொந்த மைதான சாதகங்களினை கருதி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

இதன்படி துடுப்பாடத்தொடங்கிய பங்களாதேஷ் இளையோர் அணி ஒரு நல்ல ஆரம்பத்தினை வெளிக்காட்டி இருப்பினும், போட்டியின் 7ஆவது ஓவரில் இலங்கை தரப்பு பந்து வீச்சாளர் அசிந்து பெர்னாந்து கைப்பற்றியிருந்த ஹட்ரிக் விக்கெட்டுகளால் தமது திறமையான ஆட்டத்தினை நீடிக்க முடியவில்லை.

வெறும் 19 வயதேயான வலதுகை வேகப்பந்து வீச்சாளரான பெர்னாந்து  பங்களாதேஷ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் தான் வீசிய ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை இளையோர் அணிக்கு முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் மூவரை வீழ்த்தும் வேலையை இலகுவாக்கியிருந்தார்.

இதனால், ஆரம்ப வீரர் அபீப் ஹொஸ்ஸைன் (8), அணித்தலைவர் மொமினுல் ஹக் (0) மற்றும் நஷ்முல் ஹொஸ்ஸைன் சன்டோ (0) ஆகியோர் மைதானத்தினை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து சற்று நிதானித்து ஆடத்தொடங்கிய பங்களாதேஷ் இளையோர் அணி மேலும் குறுகிய ஓட்ட இடைவெளியில் இரண்டு விக்கெட்டுகளை துரிதமாக பறிகொடுத்தது.

இதனால், ஒரு கட்டத்தில் அவ்வணி 77 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது.

இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில், பங்களாதேஷ் அணியின் தேசிய வீரர் நசிர் ஹொஸ்ஸைன் மற்றும் பின்வரிசை வீரர் சயிபுத்தீன் ஆகியோர் மெதுவான துடுப்பாட்டம் ஒன்றினை வெளிக்காட்டி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 150 ஓட்டங்களை தாண்ட செய்தனர்.

முடிவில், பங்களாதேஷ் இளையோர் அணி சகல விக்கெட்டுகளையும் 49.3 ஓவர்களில் இழந்து 179 ஓட்டங்களினைப் பெற்று தமது இன்னிங்சினை முடித்துக்கொண்டது.

அவ்வணியில் அதிகபட்சமாக நசிர் ஹொஸ்ஸைன் 3 பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களினையும் சயிபுத்தீன் 37 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.

இலங்கை இளையோர் அணியின் பந்து வீச்சில், ஹட்ரிக் நாயகனாகியிருந்த அசித்த பெர்னாந்து மொத்தமாக 32 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும் சமிகர கருணநாயக்க, அமில அபொன்சோ, லஹிரு சமரக்கோன், வனிது ஹஸரங்க மற்றும் இலங்கை இளையோர் அணித்தலைவர் அஞ்சலோ பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து, இலகு வெற்றி இலக்கான 180 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெற மைதானதம் விரைந்திருந்த இலங்கை தரப்பு இலக்கு எட்டும் தமது பயணத்தில் தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரொன் சந்திரகுப்தாவினையும், மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடும் ஷெஹான் ஜயசூரியவையும் விரைவான முறையில் பறிகொடுத்திருந்தது.

எனினும் களத்தில் நின்ற ஏனைய ஆரம்ப வீரர் சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்க ஆகியோர் சாமர்த்தியமான முறையில் துடுப்பாடி, மேலதிகமாக விக்கெட் எதனையும் இழக்காமல், 38.5 ஓவர்களில் 180 ஓட்டங்களினைப் பெற்று வெற்றி இலக்கைத் தொட்டனர்.

இதில் ஆட்டமிழக்காமல் நின்றிருந்த இரு வீரர்களில் ஒருவரான சதீர சமரவிக்ரம 10 பவுண்டரிகள் விளாசி 100 பந்துகளிற்கு 88 ஓட்டங்களினையும், இத்தொடரின் ஏனைய போட்டிகள் அனைத்திலும் அரைச்சதம் விளாசியிருந்த சரித் அசலங்க இப்போட்டியிலும் தனது தொடர்ச்சியான சிறப்பாட்டத்தினை காண்பித்து 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சேர்த்து 83 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் இளையோர் அணியின் பந்து வீச்சில் நயீம் ஹசன் மற்றும் மொஹமட் சபியுத்தீன் ஆகியோர் இன்று பறிபோன இரண்டு விக்கெட்டுகளையும் ஆளுக்கு ஒவ்வொன்றாக பங்குபோட்டிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் இளையோர் அணி (23 வயதுக்கு உட்பட்ட) – 179 (49.3) – நசிர் ஹொஸ்ஸைன் 39(74), மொஹமட் சபியுத்தீன் 37(71), சயீப் ஹஸன் 32(67), அசித்த பெர்னாந்து 32/4(10)

இலங்கை இளையோர் அணி (23 வயதுக்கு உட்பட்ட) – 180/2 (38.5) – சதீர சமரவிக்ரம 88*(100), சரித்  அசலங்க 83*(121), நயீம் ஹசன் 28/1 (10)

போட்டி முடிவு – இலங்கை இளையோர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


இரண்டாம் அரையிறுதிப்போட்டி

பாகிஸ்தான் இளையோர் அணியும் (23 வயதுக்கு உட்பட்ட) ஆப்கானிஸ்தான் இளையோர் அணியும் மோதிக்கொண்ட இத்தொடரின் மற்றைய அரையிறுதிப்போட்டி சிட்டகொங் MA அஸீஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியிருந்தது.

போட்டியில் அதிசிறப்பாக செயற்பட்டிருந்த பாகிஸ்தான் இளையோர் அணியின் தலைவரும் தேசிய அணி வீரருமான வலதுகை துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஸ்வானின் அபார சதத்தின் உதவியுடனும், சகல துறை ஆட்டக்காரரான பிலால் ஆசிப்பின் சிறப்பான பந்து வீச்சினாலும் பலம்மிக்க இந்திய இளையோர் அணியினை வீழ்த்தி அரையிறுப்போட்டியிக்குள் குழு A சார்பாக வந்திருந்த ஆப்கானை 123 ஓட்டங்களால் பாகிஸ்தான் இளையோர் அணி வீழ்த்தியது.

இதில் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் வெறும் 99 பந்துகளிற்கு 105 ஓட்டங்களினையும், ஆசிப் 40 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி பாகிஸ்தான் இளையோர் அணியின் வெற்றியினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் இளையோர் அணி (23 வயதுக்கு உட்பட்ட) – 267/5 (50) – மொஹமட் றிஸ்வான் 105*(99), ஹரீஸ் சொஹைல் 68(82), குல்படின் நயீப் 51/3 (10)

ஆப்கான் இளையோர் அணி – 144 (31.4) – நஜீபுல்லாஹ் ஸத்ரான் 31(25), முனீர் அஹ்மட் 29(48), பிலால் ஆசிப் 40/5 (8.4)

போட்டி முடிவு – பாகிஸ்தான் இளையோர் அணி 123 ஓட்டங்களால் வெற்றி

இத்தொடரின் அரையிறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை இளையோர் அணி மற்றும் பாகிஸ்தான் இளையோர் அணி ஆகியவை ஆசிய இளையோர் சம்பியன் கிண்ணத்தின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிக்கும் தொடரின் இறுதிப்போட்டியில் எதிர்வரும் திங்கட்கிழமை (3) மோதிக்கொள்கின்றன.

தொடரின் இறுதிப்போட்டி சிட்டகொங் நகரின் ஸாஹூர் அஹ்மத் செளத்ரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.