இங்கிலாந்து அணிக்கெதிரான உள்ளக டெஸ்ட்டில் இலங்கை இலகு வெற்றி

418

இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு என அசத்தியிருந்ததுடன், வெற்றிகளையும் பதிவுசெய்தனர்.

தலவத்துகொடையில் அமைந்துள்ள ஓஸ்டேசியா (Austasia) சர்வதேச உள்ளக கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (06) நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் தலைவர் கமல் குருப்பு முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் முறையே 19, 28, 13 மற்றும் 30 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 90 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்துடன் மோதும் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி

இதில் இலங்கை அணிக்காக கடைசி செட் 4 ஓவர்களில், தரிந்து மெண்டிஸ் மற்றும் கிரிஷாந்த பீரிஸ் ஜோடி 30 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்திருந்தனர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணி, ஆரம்பம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், போட்டியின் கடைசி செட் 4 ஓவர்களுக்காக களமிறங்கிய முபீன் ராஷித் (09) மற்றும் லீ இவன்ஸ் (19) ஜோடி 28 ஓட்டங்களை அவ்வணிக்காக அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் முறையே 16, 10, 14 மற்றும் 28 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், அரை மணி நேர இடைவெளியைத் தொடர்ந்து 2 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி மீண்டும் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணிக்காக முதலாவது செட் நான்கு ஓவர்களுக்காக அணித் தலைவர் 26 ஓட்டங்களையும், 2 ஆவது செட் நான்கு ஓவர்களில் துடுப்பாடக் களமிறங்கிய புதுமுக வீரரான மல்ஷான் ரொட்ரிகோ 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, 16 ஓவர்களில் நிறைவில் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி, முறையே 26, 34, 31 மற்றும் 32 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணி, மீண்டும் ஒருமுறை இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது.

திரிமான்னவின் துடுப்பாட்டக்கரங்கள் எதனை இழந்திருக்கின்றது?

இதன்படி, அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. எனவே 6 போட்டிகளைக்  கொண்ட உள்ளக டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2-0 என முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3, 4 ஆவது டெஸ்ட் போட்டிகள் இதே உள்ளக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இதே மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அபிவிருத்தி உள்ளக அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

அத்துடன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் உள்ளக கிரிக்கெட் அணியுடனான போட்டியில்  41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் உள்ளக அணி, வெற்றியைப் பதிவுசெய்தது.

போட்டியின் சுருக்கம்

முதலாவது டெஸ்ட்
இலங்கை அணி – 90 (16)
இங்கிலாந்து அணி – 68 (16)
முடிவு – இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 22 ஓட்டங்களால் வெற்றி

இரண்டாவது டெஸ்ட்
இலங்கை அணி – 123 (16)
இங்கிலாந்து அணி – 52 (16)
முடிவு – இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 71 ஓட்டங்களால் வெற்றி