இரத்தினபுரியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

223

இலங்கை கிரிக்கெட் சபையின் பூரண நிதி பங்களிப்புடன் தேசிய கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மொனரவில பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் நேற்று (30) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன் மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு இது மிகவும் தேவையான வசதிகளை வழங்குகிறது.

இரத்தினபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மூலம் இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட சப்ரகமுவ மாகாண கிரிக்கெட் சங்கங்களில் உள்ள வீரர்களுக்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதேபோல, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் இங்கை அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய, பெதும் நிஸ்ஸங்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் நினைவுப் பலகையை திறந்து வைத்தனர். இரத்தினபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

7 மத்திய ஆடுகளங்கள், ஐந்து பக்க ஆடுகளங்கள் மற்றும் இரண்டு கான்கிரீட் பக்க விக்கெட்டுகளை உள்ளடக்கிய இந்த மைதானம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு வரும்போது எதிர்காலத்தில் பயிற்சிப் போட்டிகள், மகளிருக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிடிகள் மற்றும் பாடசாலை மற்றும் கழக மட்டப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த மைதானம் இலங்கை கிரிக்கெட் சபையினால் திறக்கப்பட்ட 11ஆவது மாவட்ட மைதானமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<