தெற்காசியாவின் நீச்சல் நாயகன் மெத்தியூ அபேசிங்க

138

இலங்கையில் கிரிக்கெட்டுக்கு, கால்பந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அந்தளவு வரவேற்பும், முக்கியத்துவமும் நீச்சல் விளையாட்டுக்கு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், 125 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட சலன அசைவைக் கொண்ட விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகின்ற நீச்சலில் சாதனைக்கு மேல் சாதனை படைத்த வீரர் தான் அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ்.  

நீச்சல் உலகின் பறக்கும் மீன் என்றழைக்கப்படுகின்ற பெல்ப்ஸ், உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து 23 தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்தார். 

அந்த வரிசையில் ஆசியாவில் எந்தவொரு வீரராலும் இதுவரை நீச்சலில் அதிகளவு தங்கப் பதக்கங்களை வெல்ல முடியாமல் போனாலும், தெற்காசியாவில் இலங்கையின் நட்சத்திர வீரரான மெத்தியூ அபேசிங்க, அடுத்தடுத்து 14 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 

இலங்கைக்காக 7 தங்கப் பதக்கங்களை வென்ற மெதிவ் அபேசிங்க

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு……

இலங்கையின் நீச்சல் விளையாட்டை எடுத்துக் கொண்டால் ஜுலியன் போலிங் முதல் ஹேஷான் உனம்புவ, ரஹீம் சகோதரிகள் ஆகியோர் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் ஆவர்.  

அந்த வரிசையில் தற்போது அபேசிங்க குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பல சர்வதேச வெற்றிகளை ஈட்டி இலங்கையின் நீச்சல் விளையாட்டில் தமக்கென்ற தனி இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டிகளில் புதிய தெற்காசிய சாதனையுடன் அன்ட்ரூ அபேசிங்க இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இதனால், 15 வயதுடைய இளம் வீரரான அன்ட்ரூ அப்போதைய காலகட்டத்தில் இலங்கையின் நீச்சல் நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

எனினும், அமெரிக்காவில் பட்டப்படிப்பினை மேற்கொண்ட அன்ட்ரூவுக்கு சிறிதுகாலம் தான் இலங்கை சார்பாக விளையாட முடிந்தது. அதன்பிறகு அவர் நீச்சல் விளையாட்டில் இருந்து விடைபெற்றார்

எனினும், ஆண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் (Breakstroke) 2008ஆம் ஆண்டு அன்ட்ரூ அபேசிங்கவினால் நிலைநாட்டப்பட்ட சாதனை பத்து வருடங்கள் தாண்டியும் இதுவரை முறியடிக்கப்படவில்லை

இதனையடுதது சிறிதுகாலம் அபேசிங்க குடும்பத்தில் இருந்து எந்தவொரு வீரரும் தேசிய மட்ட நீச்சல் போட்டிகளுக்கு அறிமுகமாகவில்லை

ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் அன்ட்ரூ அபேசிங்கவின் சகோதரரான மெத்தியூ அபேசிங்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்

குறித்த போட்டியில் 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்ட மெத்தியூ, 1991ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 5ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில்  இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜுலியன் போலிங்கினால் பெற்றுக்கொண்ட 5 தங்கப் பதக்கங்கள் என்ற சாதனையை 25 வருடங்களுக்குப் பிறகு மெத்தியூ அபேசிங்க முறியடித்தார்

அத்துடன் நின்றுவிடாமல், 2016 ஒலிம்பிக் மற்றும் 2018 பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் களமிறங்கிய மெத்தியூ அபேசிங்க ஏழு தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டார்

ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் (Freestyle) முதல் தங்கப் பதக்கத்தை வென்ற அவர், 200 மீற்றர் சாதாரண நீச்சலில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்

இதனையடுத்து 100 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் (Butterfly) அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்திய மெத்தியூ, ஆண்களுக்கான 4x100 சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேநேரம், கடைசி 3 நாட்களில் மேலும் 3 தங்கப் பதக்கங்களை அவர் வெற்றி கொண்டார். இதில் 100 மீற்றர் சாதாரண நீச்சல், 200 மீற்றர் கலப்பு நீச்சல் மற்றும் 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் ஆகிய போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டார்.  

இதன்படி, தொடர்ச்சியாக இரண்டு தெற்காசிய விளையாட்டு விழாக்களில் 14 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்

அத்துடன், 2016ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியில் பல சாதனைகளை முறியடித்து வருகின்ற மெத்தியூ அபேசிங்க, தனது பெயரின் கீழ் ஏழு தேசிய சாதனைகளை வைத்துள்ளார்

இந்த நிலையில், தனது சாதனை வெற்றி குறித்து பேசிய தெற்காசியாவின் மைக்கல் பெல்ப்ஸ் என்றழைக்கப்படுகின்ற 23 வயதான மெத்தியூ அபேசிங்க

“நான் இறுதியாக நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் முன்னாள் நீச்சல் வீரரான ஜூலியன் போலிங்கின் சாதனையை முறியடித்தேன்

இந்தமுறை எனது சொந்த சாதனையை சமன் செய்துள்ளேன். நான் எப்போதும் இலங்கைக்குச் சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். அதைச் செய்வது ஒரு நல்ல உணர்வையும், மரியாதையையும் கொடுக்கிறது

எனக்கு 4 வயதாக இருக்கும் போது தான் நீச்சல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதை நான் முதலில் தற்காப்புக்காகத் தான் கற்றுக் கொண்டேன். அதன்பின்னர் நீச்சல் விளையாட்டின் மீது கொண்ட  அன்பு காரணமாகத் தான் ஒரு இலட்சியமாகக் கொண்டு பயிற்சிகள் எடுத்தேன்.  

2013இல் நடைபெற்ற இளையோர் ஆசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வெற்றி கொண்டேன். இலங்கை சார்பாக அவ்வாறானதொரு போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இலங்கை வீரராக இடம்பிடித்தேன். அன்றிலிருந்து ஒலிம்பிக் விழா, பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா மற்றும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிட்டுள்ளேன்.

எனவே, இனிவரும் காலங்களில் இலங்கைக்கு என்னால் முடிந்தவரை தங்கப் பதக்கங்களை வெல்வதே எனது நோக்கம். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே ஒரு மரியாதை என்பதால் தனிப்பட்ட பாராட்டுக்கள் அல்லது அது போன்ற எதையும் நான் பொருட்படுத்தவில்லை” என்று மெத்தியூ அபேசிங்கே கூறினார்.

தேசிய சாதனையுடன் தங்கம் வென்ற மெதிவ் அபேசிங்க

தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினம் (6) நடைபெற்ற…..

அமெரிக்காவில் பிறந்த 23 வயதான மெத்தியூ அபேசிங்க, அங்குள்ள ஒஹியோ பல்கலைக்கழகத்தில் 2017 முதல் நீச்சல் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். அத்துடன் சிறுவயது முதல் தனது அப்பாவான மனோஜ் அபேசிங்கவிடம் நீச்சல் பயிற்சிகளை எடுத்து வருகின்ற மெத்தியூ, அவரையே தனது பயிற்சியாளராகவும் கொண்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, மெத்தியூ அபேசிங்கவின் இளைய சகோதரர்களான கைல் அபேசிங்க மற்றும் டிலோன் அபேசிங்க ஆகிய இருவரும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதை இலக்காகக் கொண்டு, ஓஹியோ பல்கலைக்கழகத்தில் தனது பயிற்சியை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்குச் மிக விரைவில் செல்லவுள்ள மெத்தியூ அபேசிங்க, தனது அப்பாவும் பயிற்சியாளருமான மனோஜ் அபேசிங்கேவுடன் இணைந்து அடுத்த சில மாதங்களை அங்கு கழிக்கவுள்ளார்

இந்த நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள தொடர்ந்து பயிற்சிகளை எடுக்கவுள்ளேன். இதற்காக நான் அமெரிக்கா செல்லவுள்ளேன” என தனது அடுத்த எதிர்பார்ப்பு குறித்து அபேசிங்க தெரிவித்தார்.  

எனவே, சுமார் 19 வருடங்களாக நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டு ஒரு சாதனை நாயகனாக இலங்கைக்கு இளம் வயதிலேயே பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்ற மெத்தியூ அபேசிங்கவின் ஒலிம்பிக் கனவு நிறைவேற வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<