“குசல் பெரேரா முழு உடற்தகுதியுடன் இல்லை” – கிரேண்ட் பிளவர்

South Africa tour of Sri Lanka 2021

2324

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் விளையாடிய குசல் பெரேரா, முழுமையான உடற்தகுதியுடன் இல்லை என இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் பெரேரா, 25 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஓட்டங்களை பெற்றாலும், இவர் ஓட்டங்களை பெறும் போது பலவீனமாக இருந்தமையை பார்க்கக்கூடியதாக இருந்தது.

இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

அத்துடன், விக்கெட் காப்பாளராக தினேஷ் சந்திமால் ஈடுபட, குசல் பெரேரா இலங்கை அணிக்காக களத்தடுப்பில் ஈடுபடவில்லை. எனவே, இதுதொடர்பில் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கேள்வியெழுப்பிய போது, கிரேண்ட் பிளவர் கருத்து தெரிவிக்கையில்,

குசல் பெரேரா துடுப்பெடுத்தாடும் போது, தோற்பட்டை பகுதியில் வலியை உணர்ந்தார். அத்துடன், ஓட்டங்களை ஓடி பெறும் போது, கடினமாக உணர்ந்தார். எனவே, அவர் முழுமையான உடற்தகுதியை அடையவில்லை என தெரிகிறது.

இன்றைய போட்டியில் குசல் பெரேரா அணிக்கு தேவை என கருதினோம். அவர் நூறு சதவீதம் உடற்தகுதியுடன் இல்லாவிடினும், அவர் துடுப்பெடுத்தாடிய விதம், அணியின் முதல் நிலை துடுப்பாட்ட வீரராக அவரை காட்டியது. எனவே, அவரின் உடற்தகுதி மற்றும் தோற்பட்டை உபாதை சரியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இலங்கை அணி நேற்றைய தினம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டும், சரியான ஓட்ட எண்ணிக்கையை அடையவில்லை. அத்துடன், இலங்கை அணியில் அதிகமாக ஓட்டமற்ற பந்துகள் ஆடப்படுவது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் ஒவ்வொரு போட்டியிலும் ஓட்டமற்ற பந்துகள் தொடர்பில் ஆராய்வோம். அதனை சரிசெய்வதற்கான குறிக்கோள்கள் உள்ளன. எனினும், கடந்த சில போட்டிகளாக அதனை நாம் செய்ய தவறிவருகின்றோம். சிலநேரங்களில் பந்தினை வேகமாக அடிக்க முற்படுவது மற்றும் பௌண்டரிகளை எதிர்பார்ப்பதால், ஓட்டமற்ற பந்துகள் அதிகமாக ஆடப்படும். இதற்கான பயிற்சிகள் மற்றும் ஆயத்தங்களை மேற்கொண்டோம். எனினும், சிறந்த அணியாக இருப்பதற்கு, ஓட்டமற்ற பந்துகளை குறைத்துக்கொள்வது அவசியமாகும் என கிரேண்ட் பிளவர் சுட்டிக்காட்டினார்.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு T20I போட்டிகள் நிறைவுபெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டி நாளைய தினம் (14) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…