சுற்றுலா தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான முதல் நான்கு நாள் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர நிறைவில் லசித் குரூஸ்புள்ளே மற்றும் ரமேஷ் மெண்டிஸின் துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் இலங்கை A அணி 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (12) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய லசித் குரூஸ்புள்ளே மற்றும் லஹிரு உதார ஆகியோர் நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். முதல் விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை இவர்கள் பகிர்ந்ததுடன், 42 ஓட்டங்களை பெற்று உதார ஆட்டமிழந்தார்.
லஹிரு உதாரவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து குரூஸ்புள்ளே அபாரமாக ஆட மறுமுனையில் களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ (10 ஓட்டங்கள்), கமிந்து மெண்டிஸ் (28 ஓட்டங்கள்) மற்றும் நிபுன் தனன்ஜய (13 ஓட்டங்கள்) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இவர்களின் ஆட்டமிழப்பிற்கு மத்தியில் சிறப்பாக ஆடிய லசித் குரூஸ்புள்ளே 98 ஓட்டங்களை பெற்றிருந்த போது, துரதிஷ்டவசமாக செனுரன் முத்துசாமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 2 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இலங்கை அணி ஒரு கட்டத்தில் 217 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் தேசிய அணியின் சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து அபாரமான துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இதில் லசித் எம்புல்தெனிய 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ரமேஷ் மெண்டிஸ் மறுபக்கம் அரைச்சதம் கடந்தார்.
எம்புல்தெனிய ஆட்டமிழந்த பின்னர் மிலான் ரத்நாயக்க, ரமேஷ் மெண்டிஸுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப இலங்கை அணி 300 ஓட்டங்களை கடந்தது. எனினும் ரமேஷ் மெண்டிஸ் 78 ஓட்டங்களை பெற்று தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து வருகைத்தந்த டில்சான் மதுஷங்க 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற மிலான் ரத்நாயக்க 23 ஓட்டங்களை பெற இலங்கை அணி 83 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க A அணியின் பந்துவீச்சில் செனுரன் முத்துசாமி அபாரமாக செயற்பட்டு 122 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.