இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்தி வரும், T20 லீக் தொடரின் (SLC T20 League) ஏழாவது ஆட்டத்தில் காலி அணி தம்புள்ளை அணியினை 38 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரில் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான காலி அணி இந்த வெற்றியுடன், T20 லீக்கின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பினையும் உயிர்ப்பாக வைத்திருக்கின்றது.
குணதிலக்கவின் அபார துடுப்பாட்டத்தால் தம்புள்ளைக்கு வெற்றி
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கண்டி அணிக்கு …
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (29) தொடங்கியிருந்த இப் போட்டியின், நாணய சுழற்சியில் வென்ற காலி அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது தரப்பிற்காக முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் துடுப்பாடிய காலி அணி, குறுகிய ஓட்ட இடைவெளிகளுக்குள் அடுத்தடுத்த விக்கெட்டுக்களை இழந்தது. எனினும், ஆரம்ப வீரராக வந்த குசல் மெண்டிஸ் அதிரடி அரைச்சதம் ஒன்றுடன் தனது தரப்பினை வலுப்படுத்தினார்.
அரைச்சதம் தாண்டிய மெண்டிஸின் விக்கெட் வனிந்து ஹஸரங்கவின் ரன் அவுட் ஆட்டமிழப்பில் பறிபோனது. 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட மெண்டிஸ், 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகளை விளாசி 58 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேவேளை, மெண்டிஸுக்கு இது தொடரில் கிடைத்த முதலாவது அரைச்சதமாகவும் அமைந்திருந்து.
மெண்டிஸை அடுத்து மத்திய வரிசையில் ஆடிய அஞ்சலோ பெரேரா மற்றும் ஜெஹான் டேனியல் ஆகியோர் தமது சிறு அதிரடி மூலம் காலி அணிக்கு துடுப்பாட்டத்தில் உதவினர்.
தோல்வியுறாத அணியாக T20 லீக்கில் முன்னேறும் கொழும்பு அணி
இலங்கை கிரிக்கெட் சபை, மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்து நடாத்தி வரும் T20…
இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு காலி அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது. அஞ்சலோ பெரேரா 34 ஓட்டங்களையும், ஜெஹான் டேனியல் ஆட்டமிழக்காது 11 பந்துகளுக்கு 24 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சில், இடதுகை சுழல் வீரரான அமில அபொன்சோ வெறும் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் லக்ஷான் சந்தகன் மற்றும் அணித்தலைவர் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.
இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை அணி, தமது துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பல் காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
தம்புள்ளை அணியின் வெற்றிக்காக தனுஷ்க குணத்திலக்க அரைச்சதம் ஒன்றினை கடந்து போராடியிருந்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் கூட இருபது ஓட்டங்களை தாண்டியிருக்காத காரணத்தினால் அவரது துடுப்பாட்டம் வீணானது. 58 பந்துகளை எதிர்கொண்ட குணத்திலக்க 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இந்திய அணியின் முன்னாள்…
மறுமுனையில் காலி அணிக்காக பந்து வீச்சில் அசத்திய வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித 28 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்ததோடு, 22 வயதேயான சுழல் வீரர் சஹன் ஆராச்சிகேவும் 2 விக்கெட்டுக்களை சாய்த்து வெற்றிக்கு உதவியிருந்தார்.
இப்போட்டியில் தோல்வியினை தழுவிய தம்புள்ளை அணி, T20 லீக்கில் மூன்று வெற்றிகளை பெற்றிருப்பதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கவில்லை. எனினும், காலி அணி தமது அடுத்த போட்டியில் வெற்றி பெறும் நிலையில், தம்புள்ளை அணி இடையூறுகள் ஏதுமின்றி இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில், அவர்களும் அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.
இதேநேரம், எந்தவொரு தோல்விகளுமின்றி T20 லீக்கில் ஆடி வரும் தினேஷ் சந்திமாலின் கொழும்பு அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
போட்டி முடிவு – காலி அணி 38 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















