முதல்தரப் போட்டிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சதம் கடந்த உபுல் தரங்க

728

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற, மாகாண ரீதியிலான “சுபர் 4” முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதி வாரப் போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் (23) இன்று முடிவடைந்தது.

கொழும்பு எதிர் தம்புள்ளை

தேசிய அணி வீரர்களான தினேஷ் சந்திமால், ஷெஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் கொழும்பு அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்திருந்த போதிலும், தம்புள்ளை அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இன்னும் 160 ஓட்டங்களே தேவையாக உள்ளது. அத்தோடு, தம்புள்ளைத் தரப்பு இந்தப் பருவகாலத்திற்கான மாகாண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் அணியாகவும் மாற சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக (21) தொடங்கியிருந்த இப்போட்டியில், கொழும்பு (210) மற்றும் தம்புள்ளை (359)  ஆகிய அணிகளின் முதல் இன்னிங்சுகளை அடுத்து, மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்த கொழும்பு அணி ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவின் போது, 37 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தது. களத்தில் ஷெஹான் ஜயசூரிய  24 ஓட்டங்களுடனும், கெளஷால் சில்வா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

ஐ.பி.எல்லை நிராகரித்த குசல் பெரேரா முதல்தர போட்டியில் அபாரம்

ஆட்டத்தின் மூன்றாம் நாளில்,  எதிரணியை விட 110 ஓட்டங்கள் பின்தங்கியவாறும், சவாலான வெற்றி இலக்கை தம்புள்ளை அணிக்கு நிர்ணயிக்கும் நோக்குடனும் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த, கொழும்பு அணிக்கு ஷெஹான் ஜயசூரிய வேகமான அரைச்சதம் ஒன்றுடன் உதவியிருந்தார். எனினும், அதிரடியாக ஆடிய ஷெஹான் ஜயசூரிய ஜெப்ரி வன்டர்செயின் சுழலில் இன்றைய நாளுக்கான முதல் விக்கெட்டாக பறிபோனார். ஆட்டமிழக்கும் போது, ஷெஹான் ஜயசூரிய 11 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 76 பந்துகளில் 77 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

மறுமுனையில், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வரும் கெளஷால் சில்வா 38 ஓட்டங்களை கொழும்பு அணிக்காக பெற்றுத்தந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மத்திய வரிசையில் வந்த லஹிரு திரிமான்ன (52), வனிது ஹஸரங்க (52) ஆகியோரும் அரைச்சதங்களை விளாசினர். அத்துடன், கொழும்பு அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் 44 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மீள்நுழையும் நோக்கோடு, மாகாண கிரிக்கெட் தொடரின் இறுதிவாரப் போட்டியில் ஆடிய திசர பெரேராவினால் 18 ஓட்டங்களை மாத்திரமே குவிக்க முடிந்தது.

முடிவில், 80.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த கொழும்பு அணி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 351 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் மணிக்கட்டு சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்செய் 4 விக்கெட்டுக்களையும், சச்சித்ர சேனநாயக்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

கொழும்பு அணியின் இரண்டாவது இன்னிங்சை அடுத்து, தம்புள்ளை அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 203 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனைப் பெற இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவர்கள் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது, 48 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி வலுவான நிலையில் காணப்படுகின்றனர். களத்தில் குசல் மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும், தம்புள்ளை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

மூன்றாம் நாள் ஸ்கோர் விபரம்


 

கண்டி எதிர் காலி

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் அண்மைக்காலமாக விளையாடிவரும், உபுல் தரங்க முதல்தரப் போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட முடியும் என்பதை சதம் ஒன்றுடன் இன்றைய நாளில்  நிரூபித்துள்ளார். மறுமுனையில் ரொஷென் சில்வா தனது முதல்தர கிரிக்கெட்டில் மற்றுமொரு சதத்தினைக் குறித்துக் கொள்ள தயராகுகின்றார்.

அம்பந்தோட்டையில் இடம்பெற்று வருகின்ற இந்த ஆட்டத்தில், காலி அணியின் இமாலய முதல் இன்னிங்சை (425) அடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த கண்டி அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது, 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர், இதன் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த காலி அணி ஒரு ஓட்டத்தைப் பெற்றிருந்தது. களத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லஹிரு மிலந்த ஓட்டங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவ வர்ணபுர 1 ஓட்டத்துடனும் இருந்தனர்.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை அணியின் சுற்றுப்பயண விபரம்

ஆட்டத்தின் மூன்றாம் நாளில் எதிரணியினை விட 241 ஓட்டங்கள் முன்னிலை அடைந்தவாறு இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த காலி அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக பங்களிக்காத போதிலும், மூன்றாம் இலக்கத்தில் ஆடிய உபுல் தரங்க அட்டகாசமான சதம் ஒன்றினைக் கடந்து சிறப்பாக செயற்பட்டிருந்தார். இது முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் தரங்க பெற்ற 23ஆவது சதமாகவும் அமைந்திருந்தது.

தரங்கவின் விக்கெட்டை அடுத்து, காலி அணியின் மத்தியவரிசை வீரர்கள் பிரகாசிக்காத போதிலும் ரொஷேன் சில்வா தனது பொறுமையான துடுப்பாட்டத்தினால் தனது தரப்புக்கு கைகொடுத்திருந்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்சிலும், சதம் கடந்திருந்த ரொஷேன் சில்வா மீண்டும் அரைச்சதம் ஒன்றைக் கடந்து, மாகாண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக மாறினார்.

சில்வா, தரங்க ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு காலி அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இரண்டாவது இன்னிங்சில் 298 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து கொழும்பு அணியை விட மிகப்பெரிய ஓட்டங்கள் (538) முன்னிலையுடன் காணப்படுகின்றது. களத்தில் ரோஷென் சில்வா 88 ஓட்டங்களுடனும், தம்மிக்க பிரசாத் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான சாமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுக்களையும், லஹிரு சமரக்கோன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மூன்றாம் நாள் ஸ்கோர் விபரம்

இரண்டு போட்டிகளினதும் நான்காம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்.