இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2 பயிற்சியாளர்கள் நியமனம்

New Coaching Appointments – Sri Lanka Cricket

17

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜூலியன் வுட்டும், சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக ரெனே ஃபெர்டினாண்ட்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜூலியன் வுட் ஒரு வருட காலத்திற்கும், ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் இரண்டு வருட காலத்திற்கும் பணியாற்றுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நியமனங்கள், அண்மையில் நிறைவடைந்த 2025 ஆசியக் கிண்ணத் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற தவறிய இலங்கை அணி மீது நம்பிக்கை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பவர் ஹிட்டிங் திட்டத்தை” (Power Hitting Program) உருவாக்கியவரான வுட், கிரிக்கெட் நுட்பங்களுடன் நவீன பயிற்சி முறைகள் மற்றும் உயிர்ப்பௌதிகவியலை (Biomechanics) இணைத்து, வீரர்களின் துடுப்பாட்டத் திறனை (Hitting Power) மேம்படுத்துவதில் புகழ்பெற்றவராக திகழ்கிறார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB), கிளௌசெஸ்டர்ஷயர் CCC, ஹாம்ப்ஷயர் CCC, மிடில்செக்ஸ் CCC மற்றும் ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் உட்பட பல முக்கிய அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

இதற்கு முன், கடந்த ஜூலை மாதம் வுட் இலங்கை ஆடவர், மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுடன் ஒரு வார சிறப்பு பயிற்சி முகாமை நடத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதனிடையே, வைகாடோ பல்கலைக்கழகத்தில் உயிர்ப்பௌதிகவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஃபெர்டினாண்ட்ஸ், கிரிக்கெட் செயல்திறனை மேம்படுத்த அறிவியலை பயன்படுத்துவதில் பரந்த அனுபவம் கொண்டவர். இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பணியாற்றிய அவர், சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உயிர்ப்பௌதிகவியல் சார்ந்த பயிற்சி திட்டங்களை வழங்கியுள்ளார். 

மணிக்கட்டு மற்றும் விரல் சுழலில் நிபுணரான ஃபெர்டினாண்ட்ஸ், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு உயிர்ப்பௌதிகவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார், அங்கு அவர் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் காயம் ஏற்படும் அபாய மதிப்பீடுகளை நடத்தியுள்ளார். 

சர்வதேச பொறுப்புகளுடன் கூடுதலாக, ஃபெர்டினாண்ட்ஸ் ஈஸ்டர்ன் சப்பர்ப்ஸ் கிரிக்கெட் கழகம், UTS நோர்த் சிட்னி கிரிக்கெட் கழகம், ஹாக்ஸ்பெரி கிரிக்கெட் கழகம் மற்றும் சிட்னி பல்கலைக்கழக கிரிக்கெட் கழகம் உள்ளிட்ட பல கழகங்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டுடனான அவரது இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில், சுழல்பந்து வீச்சு பயிற்சி, போட்டி தயாரிப்பு, செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் வீரர் மேம்பாடு ஆகியவற்றை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை ஆண்கள் அணி, எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது, அதைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் திகதி முதல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்பு T20I தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<