தசுன் ஷானகவின் சகலதுறை ஆட்டத்தினால் ராணுவப்படை அணியை வீழ்த்திய SSC

1602
Premier League - Tier A Roundup

இலங்கையின் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான சுப்பர் 8 சுற்றுப் போட்டியொன்றில் ராணுவப்படை விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த SSC கழகம் 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது.

இதேவேளை, மேலும் இரண்டு சுப்பர் 8 போட்டிகள் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றததுடன், அவற்றின் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்.

SSC கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (சுப்பர் 8)

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சச்சித்ர சேனநாயக்க (4/43) மற்றும் கசுன் மதுஷங்க (3/29) ஆகியோர் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 228 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. டில்ஷான் டி சொய்சா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்கள் குவித்ததுடன், அணித் தலைவர் சீக்குகே பிரசன்ன 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அடுத்து SSC அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய தசுன் ஷானக 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், இளம் வீரர் சரித் அசலங்க 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்படி SSC கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

95 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ராணுவப்படை அணி, மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக 106 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய விமுக்தி பெரேரா 4 விக்கெட்டுக்களையும் தசுன் ஷானக 3 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்தனர். இராணுவ அணி சார்பாக மீண்டும் தனி ஒருவராக திறமையை வெளிக்காட்டிய சீக்குகே பிரசன்ன 38 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்படி 12 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய SSC அணியினர் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பேதுமின்றி இலக்கை கடந்து வெற்றியை சுவீகரித்தனர்.

போட்டியின் சுருக்கம்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 228 (67.3) – டில்ஷான் டி சொய்சா 74, சீக்குகே பிரசன்ன 40, சச்சித்ர சேனநாயக்க 4/43, கசுன் மதுஷங்க 3/29

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (81.5) – தசுன் ஷானக 92, சரித் அசலங்க 50, சீக்குகே பிரசன்ன 3/84

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 106 (37.3) – சீக்குகே பிரசன்ன 38, விமுக்தி பெரேரா 4/16, தசுன் ஷானக 3/21

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 12/0 (1)

முடிவு: SSC கழகம் 10 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • SSC கழகம் – 16.675
  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 4.67

NCC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய NCC அணி 200 ஓட்டங்களை குவித்ததுடன் பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 293 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் 93 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த NCC கழகம் நேற்றைய தினம் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றிருந்தது. 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்திலிருந்த அஞ்சலோ பெரேரா இன்று தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும் ஜெஹான் முபாரக் 46 ஓட்டங்களையும் திமிர ஜயசிங்க 42 ஓட்டங்களையும் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் உஸ்மான் இஷாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி 240 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களை பெற்றிருந்தது. முதல் இன்னிங்சில் சதம் கடந்த ரொன் சந்திரகுப்த ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (49) – அனுக் பெர்னாண்டோ 43, லஹிரு உதார 40, லஹிரு கமகே 4/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (78.2) – ரொன் சந்திரகுப்த 108, வனிது ஹசரங்க 59, தரிந்து கௌஷால் 4/71, லசித் எம்புல்தெனிய 4/110

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 332 (85.3) – எஞ்சலோ பெரேரா 108, ஜெஹான் முபாரக் 46, திமிர ஜயசிங்க 42, உஸ்மான் இஷாக் 3/47

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 60/1 (25.1) – ரொன் சந்திரகுப்த 26*

நாளை போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளாகும்.


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

தமிழ் யூனியன் அணி பெற்றுக் கொண்ட 318 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக துடுப்பெடுத்தாடி வந்த ராகம கிரிக்கெட் கழகம் நேற்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இன்றைய தினமும் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவ்வணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. அபாரமாக துடுப்பெடுத்தாடி சதங்களை பதிவு செய்த லஹிரு மிலந்த மற்றும் ஜனித் லியனகே முறையே 144 மற்றும் 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். மேலும் ரொஷேன் சில்வா ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதன்படி ராகம கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 387 ஓட்டங்களுடன் இன்றைய தினத்தை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 318 (101.5) – தினித் திமோத்ய 113, தரங்க பரணவிதான 109, அமில அபொன்சோ 3/43,  சதுர பீரிஸ் 3/57

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 387/4 (73) – லஹிரு மிலந்த 144, ஜனித் லியனகே 130, லஹிரு திரிமான 42, ரொஷேன் சில்வா 42

நாளை போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளாகும்.